எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்
கண்ணன் எங்கிருந்தோ வந்தான்


இந்த கம்பீரக் குரலைக் கேட்டு கரையாதோர் உண்டோ!


திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்..


இந்தக் கந்தர்வக் குரலைக் கேட்டு பக்தியில் உருகாதோரும் உண்டோ?


ஆம், சீர்காழி கோவிந்தராஜன் என்ற அந்தப் பெயருடனே ஒட்டிக்கொள்வது தான் கம்பீரம் என்ற வார்த்தைக்கான சிறப்பு.


பிறப்பு: சீர்காழி தான் கோவிந்தராஜனின் சொந்த ஊர். 1988ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி சிவசிதம்பரம், அவையம்மாள் தம்பதிக்குப் பிறந்தார். சீர்காழி வாணிவிலாஸ் பாடசாலையில் கல்வி பயின்றார். சிறுவயதிலிருந்தே வாய்ப்பாட்டில் நாட்டம் ஏற்பட அதில் தனது திறமையை வளர்த்துக் கொண்டார். இசைக்கல்வியை சென்னை இசைக்கல்லூரியில் பயின்றார். இளம் வயதில் தேவி நாடக சபா மற்றும் பாய்ஸ் கம்பெனியில் நடிகராகப் பணியாற்றினார். ஆனால் பாட்டு தான் அவர் வேட்கை. இசை தான் அவர் மூச்சி என்றிருந்தால் திரையிசை வாய்ப்பை நாடினார். 1953 இல் பொன்வயல் என்ற படத்துக்காக சிரிப்புத் தான் வருகுதைய்யா எனத்தொடங்கும் பாடல் தான் அவரின் முதல் பாடல். அதன் பின்னர் திரைவானில் அவர் ஒரு நட்சித்தரமாக மின்னத் தொடங்கினார்.


எம்.வேணு, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி, ஜி.ராமநாதன் எனப் பல இசையமைப்பாளர்களின் இசையில் அற்புதமான பாடல்களைப் பாடினார். 


அமுதும் தேனும் எதற்கு, மாட்டுக்கார வேலா, ஓடம் நதியினிலே, கண்ணன் வந்தான், தேவன் கோயில் மணியோசை போன்ற பாடல்களைப் பாடினார். இன்றும் அத்தனையும் கேட்பதற்கு அமுதும் தேனும் ரகம் தான்.


நடிகர்களைத் தாண்டி நிற்கும் முகம்:


சீர்காழி கோவிந்தராஜனின் குரல் தனித்துவமானது. அது எத்தனை தனித்துவமானது என்றால் எந்த நடிகருக்காக அவர் பாடினாலும் அந்த நடிகரின் முகத்தைத் தாண்டியும் தனது முகத்தை மேலோங்கச் செய்யும் கவித்துவமானது. சீர்காழியின் பாடல்களுக்காகவே ஹிட்டான படங்களும் உண்டு. சீர்காழியின் பாடல் இடம்பெறுவதும் படத்திற்கான சந்தை மதிப்பின் அடையாளமாக மாறியது. 


சீர்காழியின் குரலில் தமிழ் அவ்வளவு இனிமையாக இருக்கும். ழ,ல,ள வேறுபாடும் ந,ண,ன வேறுபாடும் அத்தனைச் சிறப்பாய் இருக்கும். மொழியை பிறழாமல் உச்சரிப்பதும் கூட தெய்வாம்சம் தான். 


அதைவிடவும், ஒரு பெரிய கூட்டத்தில் ஒலிப்பெருக்கி இல்லாமலும் கூட அவரால் பாடி அசத்த முடியும். தத்துவப் பாடல்களும், தெய்வீக ராகங்களும் சீர்காழியின் குரலில் இன்றும் இனிக்கிறது.



திருக்கோயில்களில் சீர்காழியின் பாடலைக் கேட்கும்போதெல்லாம் பக்தியுணர்வு கூடிவிடும்.


நகைச்சுவைக்கு ‘காதலிக்க நேரமில்லை’, தேசபக்திக்கு ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே, சோகத்திற்கு ‘ஆடி அடங்கும் வாழ்க்கையாடா’, சவாலுக்கு ‘வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா’ மற்றும் ‘சங்கே முழங்கு’, பக்திக்கு ‘அறுபடை வீடுகொண்ட திருமுருகா’, தத்துவத்திற்கு ‘காசிக்குப் போகும் சன்யாசி’ ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ போன்ற பாடல்கள் அவரது குரலில் காலத்தால் அழிக்க முடியாத காவியங்கள்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண