ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என அனைத்து திரையுலகிலும் திகில் படங்கள், பேய் படங்களுக்கு பஞ்சமே இல்லை. அரைத்த மாவையே அரைத்து மக்களை கலங்கடிக்கும் சில காதல் திரைப்படங்களுக்கு மத்தியில், திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையுடன், அடுத்தென்ன நிகழும் என ரசிகர்களை இருக்கை நுனியில் உட்கார வைக்கும் ஹாரர் படங்களுக்கு என்றைக்குமே ரசிகர்கள் இருக்கத் தான் செய்வார்கள்.
அப்படி சீனுக்கு சீன் திருப்பங்களுக்கு பஞ்சமில்லாத படம் தான் Saw. ஹீரோ, ஹீரோயின், வில்லன், போலிஸ், சைட் கேரக்டர் என யாரையும் பாரபட்சம் பார்க்காமல், அனைவரையும் சரி சமமாக போட்டுத்தள்ளும் கதைக்களத்தைக் கொண்டது தான் இந்த Saw திரைப்படம். ட்விஸ்டுக்கு மேல் ட்விஸ்ட் கொடுத்து ரசிகர்களை சர்ப்ரைஸ் கடலில் ஆழ்த்தும் Saw சீரிஸ் திரைப்படங்களுக்கு, உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம், ஏராளம்.
‘ஸ்லேஷர்’ கதை
பொதுவாக திரைப்படங்களில் காதல், ஆக்ஷன், ட்ராமா, காமெடி, ஹாரர், டார்க் ஹியூமர் என ஏராளமான வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஸ்லேஷர் வகை. Saw படம், சிறிதும் சந்தேகமின்று ஸ்லேஷர் வகைகளில் ஒன்று தான் என்பது படத்தை பார்த்தவுடனே அனைவருக்கும் விளங்கிவிடும். 90’ஸ் மற்றும் யர்லி 2K கிட்ஸிடம் Saw படத்தை பற்றி பேசினால், “அய்யய்யோ அந்தப் படமா..அது ரொம்ப பயங்கரமான படமாச்சே..”என அலறுவார்கள். அந்த அளவிற்கு அவர்களது வாழ்க்கையில் பயத்தை ஏற்படுத்திய படங்களில் ஒன்று, இந்த Saw.
நம்ம ஊர் சினிமாவில் உள்ளது போல ஹாலிவுட்டில் சென்ஸார் போர்டு பஞ்சாயத்தெல்லாம் பெரிதும் கிடையாது. சில சமயங்களில் ரத்தம், கொலை என அனைத்தையும் அப்படியே அப்பட்டமாக காட்டுவார்கள். அப்படி அப்பட்டமாக காட்டப்படும் படங்களுக்கு, உலகம் முழுவதும் நிறைய ரசிகர்கள் உள்ளனர் என்பது தான் ஆச்சரியத்திற்குறிய விஷயம்.
பல்வேறு பாகங்களாக வெளியாகியுள்ள இப்படத்தில், மனிதர்களை எப்படி டிசைன் டிசைனாக போட்டுத்தள்ளுவது என்பது தான் கதையே! அதாவது, ஒரு மனிதனை எந்த அளவிற்கு வேண்டுமானாலும் சித்தரவதை செய்து கொலை செய்ய முடியும் என்பதை எந்த வித ஃபில்டர்களும் இல்லாமல் வன்மத்தை எந்த அளவிற்க்கு காட்ட முடியுமோ அந்த அளவிற்கு காட்டி படத்தை எடுத்திருப்பார்கள். இதைத்தான் வித விதமான கதைக்களத்துடன் வெவ்வேறு பார்ட்-களில் கூறியும் இருப்பார்கள் Saw. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், கதையில் கொடூர கொலை அல்ல, கொடூர கொலை தான் கதையே!
முதல் பாகம்-மாஸ் ஹிட்
Saw படங்களை இதுவரை பல இயக்குனர்கள் வெவ்வேறு காலக்கடங்களில் இயக்கியுள்ளனர். Saw சீரிஸின் முதல் பாகம் 2004ஆம் ஆண்டு ரிலீஸாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆரம்பத்தில், “சே..என்ன கருமம் இது” என்று இப்படத்தைப் பார்த்து கூறியவர்கள், பின்னாளில் இது போன்ற படங்களையும் பார்க்க பழகி விட்டனர். அது மட்டுமின்றி, முதல் படத்தின் போதே, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றி பெற்றது Saw திரைப்படம். இப்படத்தை ஜேம்ஸ் வான் இயக்கியிருந்தார். படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்ப்பை பார்த்து விட்டு தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களை ரலீஸ் செய்யும் வேளைகளில் இறங்கிவிட்டது படக்குழு. இப்படியே Saw சீரிஸில் தொடர்ந்து பல பாகங்கள் வெவ்வேறு ஆண்டுகளில் வெளியிடப்பட்டுள்ளது.
விரைவில் வெளியாகிறது Saw-10!
கடந்த 2010 ஆம் ஆண்டில் “Saw தி பைனல் சாப்டர்” என்ற பெயரில் திரைப்படம் வெளியிடப்பட்டு Saw பட சீரிஸிர்கு ஒரு ‘என்ட் கார்ட்’ போடப்பட்டது. சரி இதோடு முடித்துக்கொள்வார்களா என்றால், அது தான் இல்லை. Saw பட சீரிஸின் அடுத்த பாகம் இப்படத்தின் 10வது பாகம் விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர்கள் மார்க் பர்க் மற்றும் ஓரன் கோலஸ் இது குறித்து பேசுகையில், ரசிகர்களின் வேண்டுகோளிக்கினங்க இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், படம் 2023 அக்டோபர் மாத்தில் வரும ஹாலோவின் தினத்தின் போது படம் வெளியிடப்படும் என கூறியுள்ளனர்.