தமிழ்நாட்டின் பிரபல ஊட்டச்சத்து நிபுணரும், நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் 'மகிழ்மதி இயக்கம்' என்ற பெயரில் அரசு சார்பற்ற அமைப்பு ஒன்றைத் தொடங்கி கடந்த 2020ஆம் ஆண்டு முதல் நடத்தி கவனமீர்த்து வருகிறார்.
மகிழ்மதி என்கிற தனது இயக்கத்தின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த, ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு மாநிலம் தாண்டி பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
மேலும் தனது அழுத்தமான அரசியல் கருத்துகளையும் தயங்காமல் இணையத்தில் முன்வைத்து வரும் திவ்யா, தனக்கு அரசியல் கட்சி ஒன்றில் இணைய அழைப்பு வந்ததாகவும், ஆனால் எந்த மதத்தைப் போற்றும் கட்சியும் இணைய தனக்கு விருப்பமில்லை என்றும் பாரதிய ஜனதா கட்சியினை மறைமுகமாகக் குறிப்பிட்டு பேசியிருந்தார். திவ்யா பகிர்ந்து கொண்ட இந்தத் தகவல் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் கவனமீர்த்தது.
இந்நிலையில், தற்போது தனியார் மருத்துவமனையில் நடைபெறும் அவலம் குறித்து திவ்யா சத்யராஜ் விழிப்புணர்வு வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“நான் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ். தனியார் மருத்துவமனைகளில் நடக்கற ஒரு முக்கியமான விஷயம் பத்தி சொல்ல தான் இந்த வீடியோ. இது என்னுடைய டாக்டர் நண்பர்கள் கிட்ட இருந்து வந்த தகவல் தான். சில தனியார் மருத்துவமனைகள்ல மருத்துவமனைக்கு லாபம் வரணும் அப்படிங்கறதுக்காக தேவையில்லாத ரத்த பரிசோதனை, ஸ்கேன், எம்.ஆர்.ஐ இதையெல்லாம் பேஷண்டுகளை செய்ய வைக்கறாங்க.
ஒரு பேஷண்ட் குணமானா கூட 2 நாள் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆக சொல்லி டிஸ்சார்ஜ் பண்றாங்க. தனியார் மருத்துவமனைக்கு போனா நோய் குணமாகும் அப்படிங்கற நம்பிக்கைய, விட பணம் காலியாகும் அப்படிங்கற கவலை தான் நோயாளிகளுக்கு அதிகமா இருக்கு.
எங்க அமைப்பு மூலமா சில பேஷண்டுகளுக்கு நாங்க உதவி செஞ்சாலும் எல்லாருக்கும் செய்யறது நடைமுறைல முடியாத ஒரு விஷயம். நோயாளிகள் வருவாய் உருவாக்கும் இயந்திரம் கிடையாது. தனியார் மருத்துவமனைகள் வச்சு இருக்கங்கவங்க பேஷண்டுகள மனிதாபமானத்தோட நடத்தணும்னு நான் கேட்டுக்கறேன்” என்று பேசியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனமீர்த்து வருகிறது.
மேலும் படிக்க: Manjummal Boys: குடிப்பொறுக்கிகளை கொண்டாடும் நம்மூர் அரைவேக்காடுகள்; மஞ்சும்மல் பாய்ஸை வறுத்தெடுத்த ஜெயமோகன்!