IND Vs ENG 5th Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியின், மூன்றாவது நாளில் ரோகித் சர்மா களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக பும்ரா இன்றைய போட்டியின் போது கேப்டனாக செயல்படுவார் என இந்திய கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்துள்ளது. முதுகுத்தண்டு பிரச்னை காரணமாக ரோகித் சர்மா களமிறங்கவில்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பும்ரா இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.


டெஸ்ட் தொடர்:


இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய நிலையில் இரு அணிகளும் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியால், அந்த அணி 218 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், அதிகபட்சமாக சுப்மன்கில் 110 ரன்களும், கேப்டன் ரோகித்சர்மா 103 ரன்களும் விளாசினர். படிக்கல் 65 ரன்களும், சர்பராஸ் கான் 56 ரன்களும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் குல்தீப் யாதவ் 30 ரன்களை எடுத்தார்.






259 ரன்கள் முன்னிலை:


இரண்டாவது நாளின் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இன்று ஆட்டத்தை தொடங்கிய சிறிது நேரத்தில் இந்திய அணி 477 ரன்களுக்கு ஆல் ஆட்டமிழந்தது. இந்திய அணிக்கு எதிராக இந்த தொடர் முழுவதும் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தி வரும் சோயிப் பஷீர் இந்த இன்னிங்சிலும் அசத்தினார். அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும், டாம் ஹார்ட்லி 2 விக்கெட்டையும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.


அடுத்தடுத்து விக்கெட்:


இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில், ஜாக் கிராவ்லி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பென் டக்கெட் 2 ரன்களிலும், ஒல்லி போப் 19 ரன்களிலும் பெவிலியன் திரும்பினார். அதிரடியாக விளையாடிய பேர்ஸ்டோ 39 ரன்களில் நடையை கட்டினார். இந்திய அணி சார்பில் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர்.