நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோவாக நடித்த ‘அமர காவியம்’ படம் வெளியாகி இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவடைகிறது,
பெரும் எதிர்பார்ப்போடு வெளியான படம்
2014 ஆம் ஆண்டு இயக்குநர் ஜீவா ஷங்கர் இயக்கத்தில் வெளியானது ‘அமர காவியம்’ படம். நடிகர் ஆர்யா தயாரிப்பில், அவரது தம்பி சத்யா ஹீரோவாக நடித்த படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்த படத்தில் ஹீரோயினாக மியா ஜார்ஜ் அறிமுகமானார். ஜிப்ரான் இசையமைத்த இப்படம் வெளியாகி இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவடைகிறது.
படத்தின் கதை
தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்துப் பார்த்து அலுத்துப்போன விடலைப் பருவ காதல் கதையை கையில் எடுத்திருந்தார் இயக்குநர் ஜீவா சங்கர். சத்யாவும், மியாவும் ஒரே பள்ளியில் படிக்கும் நிலையில், சத்யா நண்பனுக்கு மியா மீது காதல் ஏற்படுகிறது. காதலுக்குத் தூது போன இடத்தில் எதிர்பாராதவிதமாக மியா, சத்யாவை காதலிப்பதாக சொல்கிறார்.
நண்பனை ஏமாற்றுகிறோமே என்ற குழப்பத்துடன் காதலை ஏற்க, விதியின் வசத்தால் காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள். குடும்பத்தினர் கட்டுப்பாட்டை மீற முயல பிரச்சினை போலீஸ் ஸ்டேஷன் வரை செல்கிறது. மியா குடும்பமும் ஊரை விட்டு செல்கிறது. தன்னை மியா ஏமாற்றி விட்டதாக நினைக்கும் சத்யா அவரை கொலை செய்ய முடிவு செய்கிறார். இறுதியில் என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் கதையாகும்.
ரசிகர்களை ஏமாற்றிய படம்
விஜய் ஆண்டனி ஹீரோவாக அறிமுகமாக நான் படத்தை இயக்கிய ஜீவா சங்கர், அமர காவியம் படத்தை அறிவிக்கும்போது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. முதலில் இப்படத்தில் அதர்வா நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பதாக இருந்தது. ஆனால் பின்னர் ஆர்யா தயாரிக்க, சத்யா ஹீரோவாக நடித்திருந்தார்.
இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்காக இரண்டரை மணி நேரம் ரசிகர்களின் பொறுமையை சோதித்திருந்தார்கள். நம்பகத்தன்மை இல்லாமல் உருவாக்கப்பட்ட காட்சிகள், செயற்கை இடைச்செருகலாக சேர்க்கப்பட்ட காதலர்களுக்கு இடையேயான சிக்கல்கள் என அனைத்தும் ரசிகர்களை ஏமாற்றியது. ஜிப்ரானின் பின்னணி இசை படத்துக்கு பலமாக அமைந்தது. அதேசமயம் கண்மூடித்தனமாக காதலிக்கும் ஒருவன் என்னவெல்லாம் செய்வான் என்பதை சத்யா அழகாக நடிப்பில் வெளிப்படுத்தியிருந்தார். மியாவுக்கும் நல்ல அறிமுகமாக இப்படம் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.