திரையரங்குகளில் வெளியாகும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம், ஓடிடியில் அமேசான் ப்ரைம் வீடியோவில் நேற்று வெளியானது. இப்படத்தின் டிரெய்லர் வெளியானது முதலே, படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. படம் வெளியான சில மணி நேரங்களிலேயே #SarpattaParambarai ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகியது.


இந்நிலையில், சார்பட்டா பரம்பரை திரைப்படம் குறித்து ரசிகர்களிடத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது சமூகவலைதள கருத்துகளில் இருந்து தெரிகிறது. மெட்ராஸ் பாக்ஸிங் பரம்பரைகளில் சார்பட்டா- இடியப்ப பரம்பரைகளில் நடக்கும் ஒரு முக்கியமான போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பதுதான் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் கதை. 



கபிலன் கதாப்பாத்திரத்தில் ஆர்யா. தனது உடல்வாகை பக்காவாக ஒரு பாக்ஸிங் வீரர் போல மாற்றியமைக்க மெனகெட்டதற்கு பலன் கிடைத்துள்ளது. கபிலன் கதாப்பாத்திரம் ஆர்யாவின் பெயர் சொல்லும். ஆனால், இப்படத்தில் ஆர்யாவை தேர்வு செய்வதற்கு முன்பு, நடிகர் கார்த்தியிடம் இயக்குனர் பா.ரஞ்சித் கதை சொல்லியதாக தெரிகிறது. 


அட்டக்கத்தி படத்தை தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படத்தில், கார்த்தி நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கார்த்தி, “மெட்ராஸ் படத்திற்கு முன்பு, பா.ரஞ்சித் என்னிடம் ஒரு கதை சொன்னார். சார்பட்டா என்ற திரைப்படம். ஆனால், ரஞ்சித்தோடு பணியாற்றுவதே என்னுடைய திட்டமாக இருந்தது. அதனால், மெட்ராஸ் படத்தில் பணியாற்றினோம்” என தெரிவித்துள்ளார். 






மெட்ராஸ் பட இசை வெளியீட்டில் கார்த்தி பேசிய இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகின்றது. சார்பட்டா திரைப்படத்தை கார்த்தி ‘மிஸ்’ செய்துவிட்டார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதுமட்டுமின்றி, கார்த்தியை தொடர்ந்து சார்பட்டா கதை சூர்யாவுக்கு சொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், கடைசியில் படத்தில் நடிக்க ஒப்பந்தமானது நடிகர் ஆர்யா. 






ஆர்யாவை அடுத்து, இந்த படத்தில் துஷாரா விஜயன், சஞ்சனா நடராஜன், பசுபதி, கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையில். இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம்  புரொடக்ஸன்ஸ் கே 9 ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சண்டை பயிற்சி இயக்குநர்களான அன்பறிவு மாஸ்டர்ஸ் படத்தின் அதிரடி காட்சிகளை இயக்கியுள்ளனர்.