சூர்ய வம்சம் படம் வெளியாகி 25 வருடங்கள் ஆன நிலையில், அது குறித்து சரத்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறார்.
இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் சரத்குமார், “ ஆர்.பி. செளத்ரி தயாரித்து விக்ரமன் இயக்கிய சூர்ய வம்சம் படம் உருவாகிய அந்த நாட்களை நினைத்து பார்ப்பது என்பது நிச்சயம் ஒரு அழகான தருணம். இந்தப்படம் ஒரு ப்ளாக்பஸ்டர் திரைப்படம். இன்று வரை திரையரங்குகளில் அதிகமான பார்வையாளர்கள் பார்த்த படமாக இந்தப்படம் இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு வருடம் இந்தப்படம் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. இது சாதாரண சாதனை அல்ல.” என்று பதிவிட்டு இருக்கிறார்.
மேலும் படத்தை விரும்பி ரசித்த ரசிகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு நன்றி என்றும் படத்திற்கு மக்கள் தந்த ஆதரவை என்றும் மறக்க முடியாது. மீண்டும் அப்படி ஒரு படத்தை கொடுக்க கடினமாக உழைப்பேன்” என்று பதிவிட்டு இருக்கிறார்.
1997 ஆம் ஆண்டு சரத்குமார், தேவயானி , ராதிகா, மணிவண்ணன் உள்ளிட்ட பலரது நடிப்பில் இயக்குநர் விக்ரம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சூர்ய வம்சம்’. இந்த திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் தந்தை மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தார்.
இதில் தந்தையாக வரும் சரத்குமாருக்கு ஜோடியாக ராதிகாவும், மகன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக தேவயானியும் நடித்திருந்தனர். இந்தப்படத்தில் இடம் பெற்ற "நட்சத்திர ஜன்னலில்" பாடல் மிகப் பெரிய ஹிட் அடித்தது. அதேபோல ரோஜாப்பூ பாடலும் ஹிட் ஆனது. மாபெரும் வெற்றிபெற்ற இந்தப்பட வெளியாகி 25 வருடங்கள் ஆன நிலையில் அதனை நினைவுகூறும் விதமாக சரத்குமார் இந்தப்பதிவை வெளியிட்டு இருக்கிறார்.