தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து, பின்னர் நடிகரானவர்களில் முக்கியமானவர் விஜய் ஆண்டனி. இவர் நடிகராக அறிமுகமான  ‘நான்’ திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்கு இசையமைத்தது மட்டுமல்லாமல் அந்தப் படத்தை விஜய் ஆண்டனியே தயாரிக்கவும் செய்திருந்தார். அதனைத்தொடர்ந்து நடிப்பின் பக்கம் தீவிர கவனம் செலுத்திய விஜய் ஆண்டனி தொடர்ந்து,   ‘சலீம்’, ‘நான்’  ‘பிச்சைக்காரன்’ என பல படங்களில் தொடர்ந்து நடித்தார். இவர் படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமும் உருவானது. 




இந்த நிலையில் தான் தற்போது விஜய் ஆண்டனி இயக்குநர் விஜய் மில்டனுடன் இணைய இருக்கிறார். முன்னதாக, விஜய் மில்டன் கோலி சோடா, 10 எண்றதுக்குள்ள, கடுகு, உள்ளிட்ட படங்களை இயக்கி இருந்தார். அடிப்படையில் ஒளிப்பதிவாளரான இவர் தற்போது கன்னடத்திலும் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.  இந்நிலையில் விஜய் மில்டன் இயக்கத்தில்தான் தற்போது விஜய் ஆண்டனி நடிக்கிறார்.  இந்தப் படத்திற்கு  ‘மழை பிடிக்காத மனிதன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்பினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ்' என்ற நிறுவனம்  சார்பில் லலிதா தனஞ்செயன், எஸ்.விக்ரம் குமார், பி.பிரதீப் குமார் மற்றும் கமல் போரா ஆகியோர் இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள். கொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.




இந்த நிலையில் இந்தப் படத்தில் பிரபல நடிகர் சரத்குமார் இணைந்திருப்பதாக அந்தப்  படத்தின் இயக்குநர் கூறியுள்ளார். இது குறித்து அவர் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதலுக்கு அளித்த பேட்டியில், “ இந்தப் படத்துல சரத்குமாரும் விஜய் ஆண்டனியும் நண்பர்களா நடிக்கிறாங்க. இருந்தாலும் ஒரு கட்டத்துல ஒரு விஷயத்துக்காக எதிரெதிர் நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய சூழ்நிலை வரும். இது பிரச்னைகளை உண்டாக்கும். 


படத் தலைப்ப இப்படி வைச்சதுக்கு ஒரு காரணம் இருக்கு.. படத்துல கதாநாயகனுக்கு ஏன் மழை பிடிக்காம இருக்கு அப்படிங்கிறதுக்கான காரணத்த வெளிப்படையா சொல்லல. ஆனா படத்தோட முடிவுல படத்தலைப்புக்கான காரணத்தை ஆடியன்ஸ் புரிஞ்சிப்பாங்க. இதுல கன்னட நடிகர்களும் நடிச்சிருக்காங்க. கன்னட நடிகரான தனன் ஜெயா இந்தப் படத்துல நெகடிவ் கதாபாத்திரத்துல நடிச்சிருக்காரு. இந்தப் படம் கோலி சோடாவோட இன்னொரு வெர்ஷனா இருக்கும். ஒரு தரப்பு மக்களை தொடர்ந்து தாழ்த்திக்கிட்டே இருக்கும் போது அவங்க என்ன பண்ணுவாங்க. திருப்பி அடிப்பாங்க.. இந்தப் படத்துலயும் ஒரு சைலண்டனா மனுஷனோட பொறுமைக்கு தொடர்ந்து சோதனை வருது.. அப்ப அவன் திருப்பி தாக்குவான்.. 
டிசம்பர்ல டையூ-டாமன் ல  ஷூட் நடக்க இருக்கு.. இந்த வருஷத்தோட இறுதியில படத்தோட ஷூட் முடிவடையும். என்று கூறியுள்ளார்.