அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம், காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் 11 ஆம்  ஆண்டு, காவிரியை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ரதயாத்திரை நேற்று கும்பகோணம் வந்தடைந்தது. காவேரி ஆறு இந்திய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தை சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. இதன் நீளம் 800 கிமீ. கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் ரூரல், சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாவும் தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.




இரண்டு மாநிலத்தை சேர்ந்த பல ஆயிரம் ஏக்கர் சாகுபடிக்கும், குடிநீர் மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்கும் பயன்படும் காவிரியை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் காவிரியை துாய்மைப்படுத்த வேண்டும், கழிவுகளை கொட்டக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாத்திரை வருடந்தோறும் நடைபெற்று வருகின்றது. காவிரியை நிரந்தரமாக துாய்மையாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ரதயாத்திரை நடைபெற்றது. இந்த ரதயாத்திரை கடந்த மாதம் 23 ஆம் தேதி கர்நாடகா மாநிலம் தலை காவேரியில் தொடங்கியது. கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக காவிரி நதி செல்லும் பாதை வழியாக, ரதயாத்திரை சென்று வரும் 10 ஆம் தேதி பூம்புகாரில் நிறைவடைகிறது. மூத்த துறவி சுவாமி நாகேஸ்வரநந்தா தலைமையில் அகில பாரதீய சந்நியாசிகள் சங்க நிறுவனர் சுவாமி ராமானந்தா மகராஜ் யாத்திரையை தொடங்கி வைத்தார்.




யாத்திரை ஒருங்கிணைப்பாளர் ஜகதாநந்தா சுவாமிகள், வித்யாம்பாள் சரஸ்வதி, கார்த்தி கேயானந்தா, யோகி சிவ பிர்மானந்த சரஸ்வதி ஆகியோர் யாத்திரையில் பங்கேற்று காவிரியின் அனைத்து படித்துறைகளிலும் சிறப்பு பூஜை செய்து வருகின்றனர். கும்பகோணத்துக்கு வந்த காவிரி பாதுகாப்பு விழிப்புணர்வு யாத்திரை குழுவினரை, அரசு கவின் கலைக்கல்லூரி அருகே தென்பாரத கும்பமேளா மகாமக அறக்கட்டளை சார்பில் அதன் செயலாளர் வி.சத்தியநாராயணன், பொருளாளர் வேதம் முரளி,  அன்னை கருணை இல்லம் நிர்வாகி அம்பலவாணன், கோடீஸ்வர சுவாமி இறைபணி மன்றம் சிவசுப்பிரமணியம், சரவணன் மற்றும் குழுவினர் வரவேற்று காவிரி அன்னைக்கு தீப ஆராதனை செய்து வழிபட்டனர். வாசன் வெங்கட்ராமன் குழுவினர் சார்பில் துறவிகள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலை கும்பகோணம் டபீர் சத்சங்க காவிரி படித்துறையில், காவிரி அன்னை சிலைக்கு  வாசனை திரவியங்கள், பால், தயிர் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப தூப ஆரத்தி வழிபாடு நடந்தது. அப்போது காவிரி நதியில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். தொடர்ந்து மகாமக குளம் படித்துறையிலும் ஆரத்தி வழிபாடு நடந்தது.