இந்தக் காலத்தில் துணை நடிகராக, கேரக்டர் ரோல்களைச் செய்யும் குணச்சித்திர நடிகராக அறியப்பட்ட நடிகர் சரத்பாபு, எண்பதுகளின் அரவிந்த்சாமி என்றால் மிகையில்லை. 80கள் முதல் 90 கள் இறுதிவரை, நடிகர் சரத்பாபு, "ஹேண்ட்செம்  ஹீரோ"வாக, இணை ஹீரோவாக தமிழ், தெலுங்கு திரையுலகுகளில் வலம் வந்தார். அவரைப் பற்றி, ஒரு பத்திரிகையாளராக எனது அனுபவங்களைப் பகிர்கிறேன்.


அறிமுகமான சில ஆண்டுகளிலேயே, 1978-ம் ஆண்டு மட்டும் 8 படங்களில் நடித்தவர்- அதில் சூப்பர் ஹிட் படங்களான கமலின் நிழல் நிஜமாகிறது, ரஜினியின் முள்ளும் மலரும்  ஆகியவையும் அடங்கும்.  


சராசரியைத் தாண்டிய உயரம், சிவப்பு நிறம், காலத்திற்கு ஏற்ற "மாடர்ன்" மூக்கு கண்ணாடி என ஒரு டிப்டாப் நடிகராக இருந்தவர், இந்தக்கால தலைமுறைக்கு ஏற்ப சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால், எங்கள் காலத்து, அதாவது எண்பதுகளின் அரவிந்த்சாமி என்றால் மிகையில்லை.


ஆரம்ப காலக் கட்டங்களில், ஹீரோ, இணை ஹீரோ என நடித்துவந்தவர், பிறகு முக்கிய கேரக்டர் ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார். குறிப்பாக, ரஜினி, கமலுக்கு, அவர்களது படங்களில் கேரக்டர் ரோலில் சரத்பாபு  நடித்தார் என்றால் படம் சூப்பர் ஹிட் என்ற சென்டிமெண்டும் திரையுலகில் சுற்றி வந்தது. அதற்கேற்ப, ரஜினிக்கு, முள்ளும் மலரும், முத்து, அண்ணாமலை, வேலைக்காரன், நெற்றிக்கண், நினைத்தாலே இனிக்கும் ஆகிய படங்களைச் சொல்லலாம். அதேபோல், கமல்ஹாசனுக்கு, நிழல் நிஜமாகிறது, சட்டம், சலங்கை ஒலி (சாகர சங்கமம்), சிப்பிக்குள் முத்து ( ஸ்வாதி முத்யம்), மரோ சரித்ரா, நினைத்தாலே இனிக்கும், ஆளவந்தான் ஆகியவற்றை குறிப்பிடலாம்.


என்னுடைய செய்தியாளர் அனுபவத்தில், பிரபல நடிகர் ஒருவரை பேட்டி எடுக்கச் சென்ற போது, அந்த ஸ்டூடியோவின் மற்றொரு "ஃப்ளோரில்" சரத்பாபு, தொலைக்காட்சி தொடர் ஒன்றிற்காக நடித்துக் கொண்டிருந்தார். அவரை, முதல்முறையாக  சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சரத்பாபு மிகவும் மென்மையானவர். அதிர்ந்துக் கூட பேசமாட்டார். மனிதநேயம் மிக்கவர் என்றெல்லாம் திரையுலகினரால் பேசப்பட்ட சரத்பாபு, நேரில் சந்தித்தபோதுதான், அவர் உண்மையிலேயே ஜென்டில்மென்  என்ற அளவில் இருந்தார்.


தம்முடைய தந்தை ஹோட்டல் தொழிலில் ஈடுபடச் சொன்னது முதல், ஐபிஎஸ் அதிகாரியாக மாற வேண்டும் என்ற தமது கனவு, அம்மாவின் ஆசியுடன் நடிகராக மாறியது வரை பல்வேறு சம்பவங்களைப் பகிர்ந்துக் கொண்டார். நடிகை ரமாபிரபாவுடன் தாம் இணைந்து வாழ்ந்து, பிரிந்தது மற்றும் நம்பியாரின் மகள் சினேகலதாவை மணந்தது என பல விடயங்களைப் பகிர்ந்துக் கொண்டார்.  


இயக்குநர்  கே. பாலச்சந்தர்: 


குறிப்பாக, இயக்குநர்  கே. பாலச்சந்தர் தம்மை அறிமுகப்படுத்திய விதத்தை சொல்லும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். ஹைதராபாத்தில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற சென்ற பாலச்சந்தர், திடீரென சரத்பாபுவை பார்த்திருக்கிறார். அவருடைய உயரம், நிறம், உடல்மொழி ஆகியவை பிடித்துபோக, அதே இடத்திலேயே சரத்பாபுவை அழைத்திருக்கிறார். என்னுடைய படத்தில் நடிக்க தயாரா என கேட்டவர், பதிலுக்குக்கூட காத்திராமல், உடனே அந்த இடத்திலேயே "போட்டோ ஷூட்" நடத்தி, "ஓகே" செய்தாராம், அந்தப் படம்தான், தமிழில் முதல்முதலாக சரத்பாபு நடித்த பட்டினப்பிரவேசம். பிறகு எல்லாமே வரலாறு எனக் கூறியவர், ரஜினியுடன் நடிப்புலகைத்தாண்டி, மிகவும் நட்பாக இருந்ததாகவும் கூறியிருந்தார். அதேபோல், கமலுக்கும் தமக்கும் நல்ல நட்பு இருந்ததாகவும், வெளிநாட்டுப் படங்கள் குறித்து அடிக்கடி பேசுவோம் என்றும் கூறியிருந்தார்.


இன்றும் கூட, செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என்ற பாடல் வரும்போதெல்லாம் இசையும் காட்சிகளும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். அதற்கு இணையாக, மேக்கப் போடாத சரத்பாபுவும் ஷோபாவின் அழகும் நம்மை சுண்டியிழுக்கும் என்பதையும் குறிப்பிட வேண்டும். தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் தமக்கென ஓர் இடத்தைப் பிடித்த சரத்பாபுவின் நடிப்பிற்கு மற்றுமொரு சாட்சியம், இயக்குநர் ராஜ் பரத்தின் உச்சக்கட்டம் படம்தான். இந்த படத்தில், தொடர்கொலைகளைச் செய்யும் "ஆன்டி ஹீரோ"வாக சரத்பாபு அசத்தி இருப்பார். அப் படத்தை, இன்றைய தலைமுறை  தற்போது பார்த்தால், அசந்துப்போவார்கள். அந்தளவுக்கு படத்தின் திரைக்கதையும் நடிப்பும் சிறப்பாக இருக்கும் என்றால் மிகையில்லை. அதேபோல் உதிரிப்பூக்கள் படத்தில் சரத்பாபுவின் நடிப்பையும் யாரும் மறக்கமுடியாது. அண்ணாமலையில் ரஜினியின் நண்பனாக, சலங்கை ஒலியில் கமலின் நண்பனாக, முத்துவில் ரஜினியின் எஜமானாக என சொல்லிக்கொண்டே போகலாம். அனைத்திலும் கிடைத்த வாய்ப்பில் நடிப்பில் வாழ்ந்திருப்பார் சரத்பாபு.


தமிழ்த் திரையின் மறக்கமுடியாதவர்கள் பட்டியலில் இருந்த மயில்சாமி, மனோபாலா வரிசையில் தற்போது சரத்பாபுவும் இந்த ஆண்டு வரலாறாகிவிட்டார். ஆனால், சரத்பாபுவின் மென்மையான நடிப்பும், அவரது சிரிப்பும் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் என்றென்றும் நிலைத்து இருக்கும் என்பது நிச்சயம்.