தமிழ் சினிமாவின் 80கள் முதல் துணை நடிகராக திகழந்தவர் நடிகர் சரத் பாபு. 1977ஆம் ஆண்டு வெளியான பட்டினிப்பிரவேசம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு 1978ஆம் ஆண்டு வெளிவந்த இயக்குநர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான நிழல் நிஜமாகிறது திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த திரைப்படம் தெலுங்கில் இதி கத காடு என்ற பெயரில் ரீ மேக் செய்யப்பட்டது. தென்னிந்திய சினிமாக்களில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள சரத் பாபு,  தெலுங்கு மற்றும் தமிழில் தலா 80 படங்களிலும், கன்னடத்தில் 20 படங்களிலும், மலையாளத்தில் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாலகிருஷ்ணா மற்றும் சிரஞ்சீவி ஆகியோருடன் நடித்துள்ளார்.  அதேபோல், தெலுங்கில் பந்துலம்மா, 47 ரோஜுலு, சாகர சங்கமம், சிதாரா, சுவாதி முத்யம், அபிநந்தனா, ஸ்ரீராமதாசு, மகதீரா மற்றும்  மரோ சரித்ரா ஆகிய படங்கள் வெற்றி பெற்றது. 


அதேபோல், திரைப்படைத்தினைத் தொடர்ந்து தொலைக்காட்சி சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான, பெண் மற்றும் எத்தனை மனிதர்கள் சீரியல் தூர்தர்ஷனில் வெளியாகி அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் சிவக்குமாருடன் இவர் நடித்திருப்பார்.  சரத்ஜ் பாபுவின் நடிப்புத் திறமைக்கு ஆந்திர மாநில அரசு அவருக்கு 8 நந்தி விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது.  


சரத் பாபு 1951 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அமடலாவலசாவில் பிறந்தார். இவரது இயற்பெயர் சத்யம் பாபு தீட்சித். இவர் இன்று அதாவது மே மாதம் 22ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில், பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் காலமானார். 


சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில வாரங்களாகவே சரத் பாபு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். அவர் இறந்துவிட்டதாக மே 3ஆம் தேதி தகவல் வெளியான நிலையில், அந்தத் தகவலை சரத் பாபுவின் சகோதரி மறுத்தார். இதற்கிடையே தொடர் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு, இன்று (மே 22) பிற்பகல் 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். 


சென்னையில் உடல் அடக்கம்?


அவரின் உடல் சென்னை, தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டுவரப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து நாளை (மே 23ஆம் தேதி) அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 


இவரது மறைவையொட்டி திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.