தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதன் 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அப்பகுதி மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் துவங்கப்படுவதாக அறிந்ததும் ஆலையை சுற்றியுள்ள கிராம மக்கள் 2018 பிப்ரவரி 5 ஆம் தேதி தொடர் போராட்டத்தை தொடங்கினர். ஏற்கனவே செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் பொதுமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர். தூத்துக்குடியில் காற்றுமாசு படுவதாக கூறி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது நடைபெற்ற அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் எதிராக 100-வது நாளாக பேரணியாக சென்றனர். அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 2 பெண்கள் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு திமுக சார்பில் வடக்கு மாவட்ட கட்சி அலுவலகமான தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் புகைப்படங்களுக்கு தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி தலைமையில் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். இதில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி.சண்முகையா, துணை மேயர் ஜெனிட்டா, திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாசிலாமணிபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதேபோன்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் உயிரிழந்தவர்களின் கல்லறைகளுக்கு நேரில் சென்று மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். மேலும், தெற்கு வீரபாண்டியபுரம், மடத்தூர், சில்வர்புரம், பாத்திமாநகர், தோம்மையார் கோயில் தெரு, பூபாலராயர்புரம், முத்தையாபுரம், லயன்ஸ்டவுன் ஆகிய பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் அரிராகவன், வசந்தி ஆகியோர் தலைமையில் தனியார் மண்டபத்தில் வைத்து நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் புகைப்படங்களுக்கு மொழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
இதேபோல் பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நகரின் முக்கியமான பகுதிகளில் 2200 போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதேபோல் ஸ்டெர்லைட் ஆதரவு அமைப்புகளை சேர்ந்தவர்களும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தூத்துக்குடி லூர்தம்மாள்புரம், கரிகளம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஸ்டெர்லைட் ஆதரவு அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டு துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவியும், மெழுகுவரத்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். மேலும், பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.