தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான  சந்தோஷ் நாராயணனின் இசை பயணம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக டொராண்டோவில் ஒரு லைவ் கான்செர்ட் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார் சந்தோஷ் நாராயணன். 



 


அறிமுகமே டாப் டக்கர் :


"அட்டகத்தி" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். அவர் சினிமாவில் நுழைந்த  சமயத்தில் இங்கு இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், தேவா, யுவன் ஷங்கர் ராஜா மற்றும் பல இசையமைப்பாளர்கள் இசை ஜாம்பவான்களாக கொடி நாட்டி ஆட்சி செய்து வந்தனர். பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி திரைப்படம் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. ப. ரஞ்சித் இப்படம் மூலமே தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. என்றுமே பா. ரஞ்சித் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே ரசிகர்களை திரும்பி பார்க்க செய்தவர். அப்படத்தின் பாடல்களான 'ஆடிப் போனா ஆவணி...', 'ஆசை ஒரு புல்வெளி...', 'நடுக்கடலுல கப்பல..." போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது. 


 






 


பா. ரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் ஒரு வெற்றி கூட்டணி :


அட்டகத்தி படத்தை தொடர்ந்து சூது கவ்வும், ஜிகர்தண்டா, இறுதிச்சுற்று, குக்கூ, கபாலி, ஜிப்ஸி, காலா, சார்பட்டா பரம்பரை, மெட்ராஸ், கொடி, பைரவா, பரியேறும் பெருமாள், கர்ணன், வடசென்னை என பட்டியல் நீண்டு கொண்டே போகும் அளவுக்கு ஏராளமான படங்களில் அட்டகாசமான பாடல்கள் அனைவரையும் ஈர்த்தவர். சந்தோஷ் நாராயணன் - பா. ரஞ்சித் கூட்டணி என்றுமே ஒரு வெற்றி கூட்டணியாக அமைந்துள்ளது. பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையிலும் ஸ்கோர் செய்தவர். சந்தோஷ் நாராயணனின் மகள் தீ மற்றும் அறிவு கூட்டணியில் உருவான என்ஜாய் எஞ்சாமி... ஆல்பம் பட்டி தொட்டி எல்லாம் ஹிட்டானது. 


 







லைவ் கான்செர்ட் :


சந்தோஷ் நாராயணனின் 10 ஆண்டு கால இசை பயணத்தை கொண்டாடும் விதமாக ஒரு லைவ் கான்செர்ட் நிகழ்ச்சி ஒன்று டொராண்டோவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி டிசம்பர் 2ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் புக்கிங் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை ஒரு போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளார் சந்தோஷ் நாராயணன். அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இருப்பினும் இந்த போஸ்டரை பார்த்த அவரின் ரசிகர்கள் இது போல ஒரு லைவ் கான்செர்ட் இங்கேயும் நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.