இசைக்கு மொழியும் தேவையில்லை , எல்லையும் தேவையில்லை என உணர்த்திய இசையமைப்பாளர்களுள் ஒருவர்தான் சந்தோஷ் நாராயணன். அலம்பல் இல்லாத சந்தோஷ் நாராயணின் இசை அத்தனை அதகளமானது. இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் சந்தோஷ் நாராயணன் கடந்து வந்த பாதை குறித்து பார்க்கலாம்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பிறந்தவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.பொறியியல் பட்டதாரியான இவர் , இசையின் மீது சிறு வயதில் இருந்தே ஆர்வம் கொண்டவர். சில காலங்கள் ரெக்கார்டிங் இன்ஜினீயர், அரேஞ்சர், ப்ரோக்ராமர் என இசைத்துறை தொடர்பான வேலைகளை செய்து வந்தார். பிறகு முழு ஈடுபாட்டுடன் இசை பக்கம் திரும்பிய சந்தோஷ் நாராயணன் ஏ.ஆர்.ரஹ்மானிடம் சில காலம் உதவியாளராக பணியாற்றினார். அதன் பிறகு பிரவீன் மணியுடன் இணைந்து சில ஆல்பம் பாடல்களை வெளியிட்டார்.சந்தோஷ் நாராயணன் முதல் முறையாக 2008 ஆம் ஆண்டு வெளியான நேனு மீக்கு தெலுசா என்னும் திரைப்படத்தில் பின்னணி இசைக்கலைஞராக பணியாற்றினார். ஆனால் அந்த படத்தில் பாடல்கள் எதுவும் இவரது இசையில் வெளியாகவில்லை. முதன் முறையாக பா.ரஞ்சித்தின் அறிமுகப்படமான 'அட்டக்கத்தி' திரைப்படத்தில்தான் சந்தோஷ் நாராயணும் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த படத்தில் வெளியான " நடுக்கடலில் கப்பலை இறங்கி தள்ள முடியுமா ?" , "ஆடி போனா ஆவணி " போன்ற பாடல்கள் இன்றைக்கும் கிராமப்புற பேருந்துகளையும் , திருமணங்களையும் நிறைத்துக்கொண்டிருக்கின்றன.
குத்தாட்டம் போட வைக்கும் பாடல்கள் மட்டுமல்லாமல் தலை அசைத்து , கண்களை மூடி மிதக்க வைக்கும் மெலடி பாடல்களிலும் அதிரடி காட்டுவார். அதற்கு சான்றாக 2012 ஆம் ஆண்டு வெளியான பீட்சா படத்தில் இடம்பெற்ற 'மோகத்திரை '.. குக்கூ படத்தில் வெளியான ' மனசுல சூரைக்காற்று , ஆகாசத்தை நான் பார்க்குறேன் ' உள்ளிட்ட பாடல்களை கூறலாம். படத்தின் இடம் , பொருள் , ஏவலை நன்கு அறிந்தவர் சந்தோஷ் நாராயணன். சூழலுக்கு ஏற்ற இசையை கொடுப்பதில் கில்லாடி. சமீபத்தில் வெளியான மஹான் படத்தில் திருப்புமுனை பாடலாக அமைந்த எவன்டா எனக்கு கஸ்டடி பாடல் , படத்தை விட வீரியமாக இருந்தது.அதே போல குக்கூ திரைப்படத்தின் வெற்றிக்கும் மிக முக்கிய காரணம் சந்தோஷ் நாராயணின் பாடல்கள்தான்.
2013ஆம் ஆண்டு சூது கவ்வும் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காக இரண்டு விஜய் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு சிறந்த பின்னணி இசைக்கான ஒரு விருதை வென்றார்.
அதுவரையில் இருந்த தமிழ் சினிமாவின் ஃபார்முலா மெல்ல மெல்ல மாற துவங்கியது 2010 ஆம் ஆண்டிற்கு பிறகுதான். புரட்சி பேசும் நிறைய படங்கள் , மாறுப்பட்ட கதைக்களம் கொண்ட படங்கள் வெளியாகின. அதில் அத்தனையிலும் சந்தோஷ் நாராணயனின் இசை நின்று பேசியது. ஏ.ஆர்.ரஹ்மான் , இளையராஜா , யுவன் வரிசையில் தனக்கென புது பாணியை கையில் எடுத்தார் சந்தோஷ் நாராயணன். இயக்குநர்களின் கலைஞன். திரைக்கதை ஒரு பக்கம் கதை சொன்னால் , இவரின் இசை ஒரு பக்கம் கதை சொல்லும். இசையமைப்பாளர்கள் திரைத்துறையில் தடம் பதிக்க நீண்ட காலம் ஆகலாம் என்ற ஃபார்முலா சமூக வலைத்தள ஆதிக்கத்தால் உடைந்துவிட்டது. திறமை இருந்தால் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிடலாம். குறுகிய காலத்தில் பல இசைப்படைப்புகளை கொடுத்த சந்தோஷ் நாராயணன் மேலும் பல விருதுகளையும் , படைப்புகளையும் கொடுக்க வாழ்த்துகள் !