ஜாக்பாட், குலேபகாவலி உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் கல்யாண் இயக்கத்தில், நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 24) வெளியான திரைப்படம் தான் '80ஸ் பில்டப்'. படத்தின் பெயரில் இருந்த பில்டப் படத்தின் கதையில் இல்லாமல் போனதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


பெரிய திரை பட்டாளம் :


சந்தானம் ஜோடியாக சின்னத்திரை நடிகை ராதிகா ப்ரீத்தி நடிக்க கே.எஸ். ரவிக்குமார், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ்,  தங்கதுரை, மனோ பாலா , கூல் சுரேஷ் என மிக பெரிய திரை பட்டாளமே நடித்திருந்த இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க ஜிப்ரான் இசையமைத்து இருந்தார். நகைச்சுவை ஜானரில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் நகைச்சுவை என்பது என்ன என தேட வேண்டியதாக இருந்தது என்பது ரசிகர்களின் கருத்து. 


 



தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் :


தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத காமெடி கிங்காக வளம் வந்த சந்தானம் என்று ஹீரோவாக களம் இறங்கினாரோ அன்றே அவரின் மார்க்கெட் அடிவாங்க துவங்கிவிட்டது. அவர் மீண்டும் முழுநேர நகைச்சுவை நடிகராக வலம் வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. 


மூன்று நாள் வசூல் :


ஏகப்பட்ட நடிகர்களை வைத்து தற்போது வெளியான '80ஸ் பில்டப்' திரைப்படம் முதல் நாள் வசூலே வெறும் 1.2 கோடி மட்டும் தான் என்கிற நிலையில் இரண்டாவது நாள் அதை விட குறைவாக 1 கோடி வசூல் செய்ய வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வசூல் கிட்டத்தட்ட 1 கோடி என்றாலும் கூட மொத்தமாக படம் வெளியாகி மூன்று  நாட்களில் 4 கோடியை கூட தாண்டவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.  வார இறுதி நாட்களிலேயே இந்த பரிதாபமான நிலை என்றால் வார நாட்களில் எந்த அளவுக்கு வசூல் இருக்கும் என சொல்லவே முடியவில்லை. 


 



சந்தானம் சம்பளம் :


படத்தின் வசூலுக்கே இந்த நிலை என்றால் சந்தானத்தின் சம்பளம் எந்த அளவில் இருக்கும் என பேச்சுக்கள் அடிபடுகின்றன. தனது சொந்த தயாரிப்பில் படங்களை தயாரித்தும் தோல்வியை  தான் சந்தித்துள்ளார் நடிகர் சந்தானம் என்பது வருத்தமான ஒரு விஷயம். அவரின் சம்பளம் 1 கோடி இருப்பதே பெரிய விஷயமாக இருக்கும் என கருத்து தெரிவித்து வருகிறார்கள். 


ரசிகர்கள் வேதனை :


இப்படி ஒரு மோசமான நிலையில் இருப்பதை காட்டிலும் அவர் காமெடியனாகவே கலக்கி இருக்கலாம் என்பது அவரின் தீவிர ரசிகர்களின் ஏக்கமாக இருக்கிறது. அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களில் காமெடி இருந்தாலும் அதில் பழைய சந்தானத்தின் அந்த கலகலப்பை காணமுடியவில்லை. பேருக்கு தான் காமெடி இருக்கிறதே தவிர அது ரசிக்கும் படியாக எந்த வகையிலும் இல்லை என்பது தான் ரசிகர்களின் கருத்தாக உள்ளது. 




மேலும் படிக்க: 80's Build up Movie Review: காமெடி கதையில் மீண்டும் வென்றாரா சந்தானம்? - ‘80ஸ் பில்டப்’ படத்தின் விமர்சனம் இதோ..!