80களின் படங்களின் காட்சிகளை எல்லாம் ஒன்றாக அடுக்கி இன்றைய காலத்து சினிமா என பில்டப் கொடுத்தால் அது தான் "80ஸ் பில்டப்" . அந்த படத்தின் விமர்சனத்தை நாம் இங்கு காணலாம். 


எண்ண முடியா பிரபலங்கள்


குலேபகாவலி, ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கிய எஸ்.கல்யாண் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் "80ஸ் பில்டப்". இந்த படத்தின் சந்தானம் ஹீரோவாகவும், சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் சங்கீதா, கே.எஸ்.ரவிகுமார், மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான், தங்கதுரை, கூல் சுரேஷ், மனோ பாலா, மயில்சாமி, கலைராணி, சேசு, சுவாமி நாதன், ஆர். சுந்தர்ராஜன்,  ஆடுகளம் நரேன், முனிஸ்காந்த், ரெட்டின் கிங்ஸ்லி, ஆனந்த ராஜ் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜிப்ரான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. 


படத்தின் கதை


80களின் காலகட்டத்தில் படம் உருவாகியுள்ளது. கமல்ஹாசனின் ரசிகரான சந்தானம் , ரஜினிகாந்தின் ரசிகையான சங்கீதா இருவரும் அண்ணன் - தங்கையாக இருந்தாலும் ஒருவரையொருவர் பெட் கட்டி வாரி விடுவதில் வல்லவர்கள். இவர்களின் தாத்தாவான ஆர். சுந்தர்ராஜன் இறந்து போகும் நிலையில் ஊரில் இருந்து அத்தை மகளான ராதிகா பிரீத்தி வருகை தருகிறார். அவரை தன்னை காதலிக்க வைப்பேன் என சந்தானமும், நடக்காத காரியம் என சங்கீதாவும் பெட் கட்டுகிறார்கள். காதல் விவகாரத்தில் பில்ட் அப் எல்லாம் கொடுத்து சந்தானம் தன் எண்ணத்தில் வெற்றி பெறுகிறாரா? இல்லையா? என்பதே இப்படத்தின் அடிப்படை கதையாகும். 


இங்கு அடிப்படை கதை என குறிப்பிட வேண்டிய தேவை என்னவெனில் படத்தில் கிளைக்கதைகள் ஏராளமாக உள்ளது. 


நடிப்பு எப்படி?


80ஸ் பில்டப் படத்தில் நடிகர் சந்தானம் வழக்கம்போல தன் கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளார். நய்யாண்டி வசனங்களுடன் அவரின் காட்சிகள் ரசிக்கும்படி அமைந்துள்ளது. நடிகை ராதிகா ப்ரீத்தி படம் முழுக்க வருகை தந்தாலும் அப்பாவி பெண்ணாக நடிக்க முயற்சித்துள்ளார். இதனைத் தவிர்த்து சந்தானம் தங்கையாக வரும் சங்கீதா கவனிக்க வைக்கிறார். அதேபோல் சிரிப்பலையை வரவைக்கும் காட்சிகளில் ஆனந்தராஜ் மட்டுமே அல்டிமேட் பெர்பார்மன்ஸை வழங்கியுள்ளார்.


மற்றபடி கே.எஸ்.ரவிகுமார், மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான், தங்கதுரை, கூல் சுரேஷ், மனோ பாலா, மயில்சாமி, கலைராணி, சேசு, சுவாமி நாதன், ஆர். சுந்தர்ராஜன்,  ஆடுகளம் நரேன், முனிஸ்காந்த், ரெட்டின் கிங்ஸ்லி, ஆனந்த ராஜ் என பல கேரக்டர்கள் இருந்தும் சில காட்சிகள் மட்டுமே சிரிப்பலையை ஏற்படுத்துகிறது. 


படம் எப்படி?


மேலே சொன்னது போல மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான், மனோ பாலா, ஆனந்தராஜ் கூட்டணி ஒரு பக்கம், மறுபக்கம் முனிஸ்காந்த், ரெட்டின் கிங்ஸ்லி, கே.எஸ்.ரவிகுமார், ஆர். சுந்தர்ராஜன் கூட்டணி என இரண்டு தரப்பு கிளைக்கதைகளும் படத்துக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் அளவுக்கு உதவவில்லை என்பது மிகப்பெரிய மைனஸ். அதேபோல் திரைக்கதையில் சில காட்சிகள் வைக்கப்பட வேண்டுமே என்பது போல இடம் பெற்றுள்ளது. உண்மையில் எடுத்திருக்கும் கதைக்களம் எதிர்பார்ப்பை அதிகம் ஏற்படுத்திய நிலையில் சறுக்கலான திரைக்கதை 80ஸ் பில்டப்புகளை கிரிஞ்ச் தனத்திற்குள் கொண்டு சேர்க்கிறது. 


ஜிப்ரான் இசையில் ஒய்யாரி பாடல் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையும் 80களின் காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு ஓகே ரகமாக உள்ளது. ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு காதல் காட்சிகளில் அழகை கூட்டுகிறது. ஆனால்  இவ்வளவு காமெடி பிரபலங்களை கதையில் கொண்டு இருந்தும், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் “80ஸ் பில்டப்” படத்தை காலரை தூக்கி விட்டு கொண்டாடி இருக்கலாம்.