நடிகர் சந்தானம் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் டைட்டில் போஸ்டர் தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
சின்னத்திரை காமெடி நிகழ்ச்சிகள் மூலம் நடிகராக அறிமுகமாகிய சந்தானம் சிம்பு நடித்த மன்மதன் படத்தின் மூலம் பெரிய திரையில் நடிகராக அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் ரஜினி,விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் காமெடி நடிகராக உருவெடுத்தார்.
இதற்கிடையில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்த சந்தானம், தில்லுக்கு துட்டு,இனிமே இப்படித்தான், ஏ ஒன், டகால்டி, பாரிஸ் ஜெயராஜ், டிக்கில்லோனா, சபாபதி, பிஸ்கோத், குலு குலு, ஏஜெண்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தாலும், எதுவும் எதிர்பாராத வெற்றியை கொடுக்கவில்லை.
இதனால் அடுத்தடுத்த படங்களை கவனமுடன் சந்தானம் தேர்வு செய்து நடித்து வருகிறார். அதேசமயம் அவரை மீண்டும் காமெடி வேடங்களில் நடிக்கக்கோரி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் சந்தானத்தின் 18வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எஸ் பிரேம் ஆனந்த் இயக்கும் இப்படத்திற்கு “டிடி ரிட்டர்ன்ஸ்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை சுரபி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் நடிகர்கள் ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மாசூம் சங்கர், ஃபெப்சி விஜயன், மொட்டை ராஜேந்திரன், முனிஷ்காந்த், தீனா, தங்க துரை, தீபா, மானஸி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
ஆர்கே எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படம் மே மாதம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஃபார்ச்சூன் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் சந்தானம், நடிகை தான்யா ஹோப் ஆகியோர் நடிப்பில் உருவானகியுள்ள படம் “கிக்”. இந்த படத்தை இயக்குவதன் மூலம் கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், மன்சூர் அலிகான், மனோபாலா, ஒய்.ஜி.மகேந்திரன், ஷகிலா, கூல் சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. .