சஞ்சய் லீலா பன்சாலி
தமிழில் இயக்குநர் ஷங்கரைப் போல் பாலிவுட்டில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. தேவ்தாஸ், கங்குபாய், ராம்லீலா, பத்மாவத், பாஜிராவ் மஸ்தானி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்திய அரசர்கள், சரித்திரக் கதைகள் சஞ்சய் லீலா பன்சாலிக்கு பிடித்த கதைகளங்கள். இவர் இயக்கிய கங்குபாய் கத்தியாவாடி படம் கடந்த ஆண்டு தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளை வென்று குவித்தது. தற்போது சஞ்சய் லீலா பன்சாலி தனது ஹீராமண்டி என்கிற தொடரை நெட்ஃப்ளிக்ஸ் தளத்திற்காக இயக்கியுள்ளார்.
ஹீராமண்டி
திரையரங்கத்திற்காக மட்டுமே படங்களை இயக்கி வந்த பன்சாலி, முதன்முறையாக நெட்ஃப்ளிக்ஸ் தளத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். ரிச்சா சட்டா, சோனாக்ஷி சின்ஹா, மனிஷா கொயிலாரா, அதிதி ராவ் ஹைதாரி சஞ்ஜீதா ஷைக் உள்ளிட்ட பிரபல நடிகைகளை வைத்து இந்தத் தொடரை அவர் இயக்கியுள்ளார். சுதந்திர போராட்ட காலத்தை பின்னணியாக வைத்து ஹீராமண்டி என்கிற இடத்தில் பெண்களை மையப்படுத்திய ஒரு கதையாக இந்த தொடர் உருவாகி வருகிறது. இந்த தொடரின் இறுதிக்கட்ட பணிகள் ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்க மறுபக்கம் இயக்குநர் பன்சாலி மிகபெரிய பட்ஜெட்டில் பான் இந்திய படம் ஒன்றை இயக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்தப் படத்தில் இந்தியாவில் புகழ்பெற்ற ஸ்டார்களை நடிக்க வைக்க அவர் திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய நிலைப்படி பாலிவுட் நடிகர்கள் ஆலியா பட், ஜான்வி கபூர், ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இருந்தும் நடிகர்கள் நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகின்றன.
முன்னதாக சஞ்சய்லீலா பன்சாலியின் பைஜூ பாவ்ரா படத்தில் ரன்வீர் சிங்கும் அவரது காதல் மனைவி தீபிகா படுகோனேவும் ஜோடி சேர்வதாக இருந்தது. இது ரன்வீர், தீபிகா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தீபிகா திடீரென படத்திலிருந்து விலகுவதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து இந்தப் படம் கைவிடப்பட்டது.
மேலும் படிக்க : Ayodhya Ram Mandir: ஆஞ்சநேயர் அழைத்ததாக உணர்கிறேன் - ராமர் கோயில் விழாவில் பங்கேற்கும் தெலுங்கு பிரபலங்கள் கருத்து!
Pavni - Amir: "நாங்கள் சேர பிரியங்காதான் காரணம்.." பாவ்னியுடன் திருமணம் எப்போது? - அமீர் சொன்ன பதில்