ராமர் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சியை தனியார் கோவில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை செய்ய போலீசார் அனுமதி தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் தகவல் தெரிவித்த பின் நேரலை செய்யலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அயோத்தியில், ராமர் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சியை முன்னிட்டு, சென்னை பட்டாபிராமில் உள்ள தனியார் மண்டபத்தில் பஜனைகள், அன்னதானம் நடத்த அனுமதி மறுத்த காவல் துறையினரின் உத்தரவை எதிர்த்து விவேகானந்தா இந்து இயக்கம் சார்பில் அதன் தலைவர் கணபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், அயோத்தி செல்ல இயலாத பக்தர்களுக்காக பஜனை, அன்னதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிலையில் அனுமதி பெறவில்லை எனக் கூறி, நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
உடனடியாக அனுமதி கோரி விண்ணப்பித்த போது, ஏழு நாட்களுக்கு முன் விண்ணப்பிக்கவில்லை என்றும், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படக் கூடும் எனவும் கூறி அனுமதி மறுத்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது.
தனியார் மண்டபத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் எந்த மதத்தை பற்றியும் விவாதிக்கவில்லை என்றும், மற்ற மதத்தினர் வசிக்கும் பகுதி என்பதால் இந்த நிகழ்ச்சியை தடுக்க முடியாது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இன்று காலை விசாரித்தார்.
அப்போது மனுதாரருக்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, தனியார் கோவில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ அல்லது பூஜைகள் மேற்கொள்ளவோ போலீசார் அனுமதி தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் நேரலையோ அல்லது பூஜையோ மேற்கொள்ள வேண்டுமென்றால் கோவில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டுமென்றும் பின்னர் உரிய கட்டுப்பாடுகளுடன் செயல் அலுவலர் அனுமதியளிக்க வேண்டுமென்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஒருவேளை கூட்டம் அதிகரித்தால் அதனை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனவும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.