அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு செல்லும் தெலுங்கு பிரபலங்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். 


நடிகர் சிரஞ்சீவி


அயோத்தி செல்வது பற்றி நடிகர் சிரஞ்சீவி தெரிவிக்கையில், “இது மிகவும் சிறப்பானது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்பதை ஒரு அரிய வாய்ப்பாக நாங்கள் உணர்கிறோம். எனது தெய்வமாக இருக்கும் அனுமன் என்னை தனிப்பட்ட முறையில் அழைத்ததாக உணர்கிறேன். இந்த ராமர் சிலை நிறுவுவதை காணும் நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்” என தெரிவித்துள்ளார். 


நடிகர் ராம்சரண் 


அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் நடிகர் ராம்சரண், “இது ஒரு நீண்ட கால காத்திருப்பாகும். நாங்கள் அனைவரும் அயோத்தியில் இருப்பது மிகவும் மரியாதைக்குரியது” என மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். 


நடிகர் பவன் கல்யாண் 


அயோத்திக்கு காரில் செல்லும் வீடியோவை பதிவிட்டுள்ள நடிகர் பவன் கல்யாண், “ ஜெய் ஸ்ரீ ராம் ! 🙏.. அயோத்திக்கு செல்லும் வழியில்.. 'இராமரின் பிரான் பிரதிஷ்டை' பார்க்க செல்கிறேன். ராமர் 'நமது பாரத நாகரிகத்தின் நாயகன்.' ராமரை மீண்டும் 'அயோத்திக்கு' கொண்டு வர ஐந்து நூற்றாண்டுகள் போராட வேண்டியதாயிற்று” என தெரிவித்துள்ளார். 


தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் 


அயோத்தியில் நடைபெறும் இந்த பெரிய நிகழ்வில் கன்னட திரையுலகம் சார்பில் அழைக்கப்பட்ட ஒரே தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் தான்.  அவர் கூறுகையில், “இந்த விழாவில் சூப்பர் ஸ்டார்களுடன் கலந்துகொள்ளும் ஒரே தெலுங்கு தயாரிப்பாளர் நான்தான். இதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். இது ஒவ்வொரு இந்து மற்றும் இந்தியனுக்கும் பெருமை சேர்க்கும் ஒரு தருணமாகும். அயோத்தியில் ஸ்ரீ ராம் மந்திர் பிரான் பிரதிஷ்டை மற்றும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திரத்தின் வளாகத்தில் இருப்பதும், வரலாற்றைக் காண்பதும் ஒரு பாக்கியம், ”என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 






இதற்கிடையில், தெலுங்கில் மகர சங்கராந்தியை முன்னிட்டு வெளியான "ஹனுமான்" திரைப்படத்தின் படக்குழு தன்னுடைய ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ரூ.5 அயோத்தி ராமர் கோயிலுக்கு நன்கொடையாக அளிக்கப்படும் என தெரிவித்திருந்தனர். அதன்படி ஆபிஸ் வசூலில் வசூலான தொகையில் இருந்து ரூ.2.66 கோடியை ராமர் கோவில் கட்டுவதற்காக நன்கொடையாக அளித்து ஒரு தனித்துவமான சாதனையை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.