பாஜக அதிக கவனம் செலுத்தும் மாநிலங்களில் ஒன்றாக ராஜஸ்தான் உள்ளது. 25 மக்களவை தொகுதிகள் அங்கிருப்பதால், மத்தியில் ஆட்சி அமைக்க இந்த தொகுதிகளில் வெற்றிபெறுவது அவசியம். கடந்த 2014ஆம் ஆண்டிலும் சரி, 2019ஆம் ஆண்டிலும் சரி, ராஜஸ்தானில் உள்ள 25 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியிருந்தது.


சட்டப்பேரவை தேர்தல்களை பொறுத்தவரையில், கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சி அங்கு ஆட்சியை தக்க வைத்ததாக சரித்திரம் இல்லை. ஆனால், இந்த முறை வரலாற்றை மாற்றி எழுதி, ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்த பல சமூக நல திட்டங்கள் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, ஆட்சியை பிடிக்க பாஜகவும் அதிரடி காட்டி வருகிறது. 


பாஜகவின் தேர்தல் அறிக்கை:


இந்த நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், பல முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளது. உஜ்ஜவாலா திட்ட பயனாளிகளுக்கு 450 ரூபாய்க்கு எல்பிஜி சிலிண்டர் வழங்குவதாகவும், ஐந்தாண்டுகளில் 2.5 லட்சம் அரசு வேலைகள் வழங்குவதாகவும், பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதியுதவியை அதிகரிப்பதாகவும பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.


தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய பாஜக தேசிய தலைவர் நட்டா, "ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைத்தால், அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட தேர்வின் கேள்வித்தாள்கள் வெளியான முறைகேடு தொடர்பாக விசாரிக்கவும் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரிக்கவும் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்படும்.


கோதுமை குவிண்டால் ஒன்றுக்கு 2,700 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடு செய்யப்படும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் போனஸ் உட்பட, பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் கீழ் நிதி உதவி ஆண்டுக்கு  12,000 ரூபாயாக உயர்த்தப்படும்" என்றார்.


பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு..


பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் (PM-Kisan) கீழ், விவசாயிகளின் விவசாய மற்றும் பிற தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு, தற்போது ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதி உதவி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மூன்று தவணையாக வழங்கப்படுகிறது.


கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டத்தை (ERCP) குறிப்பிட்ட காலத்திற்குள் மத்திய அரசின் ஒத்துழைப்புடன் முடிக்கப்படும் என பாஜக அறிவித்துள்ளது. கிழக்கில் அமைந்துள்ள 13 மாவட்டங்களில் பாசனம் மற்றும் குடிநீர் பிரச்னைகளை தீர்க்க, வசுந்தரா ராஜே தலைமையிலான 
பாஜக அரசாங்கத்தால் இந்த கால்வாய் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு, தேசிய திட்ட அந்தஸ்தை வழங்க வேண்டும் என காங்கிரஸ் கோரி வருகிறது.


பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை மையப்படுத்தி பல்வேறு திட்டங்களை அளித்துள்ள பாஜக, "ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் மகளிர் உதவி மையங்கள் அமைக்கப்படும். 


லடோ ப்ரோட்சகன் யோஜனா திட்டத்தின் கீழ் பெண் குழந்தை பிறந்தால் 2 லட்சம் ரூபாய் சேமிப்பு பத்திரம், லக்பதி திதி திட்டத்தின் கீழ் சுமார் 6 லட்சம் கிராமப்புற பெண்களுக்கு திறன் பயிற்சி, 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு ஸ்கூட்டி, ஏழை குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு கேஜி முதல் பிஜி வரை இலவச கல்வி வழங்கப்படும்" என வாக்குறுதி அளித்துள்ளது.