சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை சந்தியா ஜாகர்லமுடி. சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்களான அத்திப்பூக்கள், வம்சம், சந்திரலேகா உள்ளிட்ட பல தமிழ் சீரியல்களிலும் பல பிறமொழி சீரியல்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்டு இருந்ததால் ஏராளமான தெலுங்கு சீரியல்களில் நடித்துள்ளார்.  


2003ம் ஆண்டு ஒளிபரப்பான 'செல்லமடி நீ எனக்கு' என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை பெற்றார். அதை தொடர்ந்து அவர் நடித்த பூமிகா, கற்பகம் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் மூலம் அடையாளம் காணப்பட்டார். 



சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வெற்றிகளை நோக்கி பயணித்த சந்தியாவின் பர்சனல் வாழ்க்கை அவ்வளவு சுமூகமாக அமையவில்லை. சமீபத்தில் அவர் கலந்து கொண்ட பல நேர்காணல்களில் அவர் அனுபவித்த துயரங்கள் குறித்து வெளிப்படையாக பேசினார். அதில் அவர் பகிர்ந்த ஒரு விபத்து தான் 2003ம் ஆண்டு கும்பகோணத்தில் ஷூட்டிங் சென்ற இடத்தில் கோயில் யானை மிதித்ததில் பலத்த காயங்கள் ஏற்பட்டு பல எலும்பு முறிவு ஏற்பட்டு உயிருக்கு போராடி பல மாதங்களுக்கு பிறகு சகஜ நிலைக்கு திரும்பி உள்ளார். 


2012ம் ஆண்டு சந்தியாவுக்கு நடைபெற்ற திருமணம் பல நாட்கள் நீடிக்கவில்லை. அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்றார். இன்று வரை தனிமையில் வாழ்ந்து வரும் சந்தியா மிகவும் இரக்க குணம் படைத்தவர்.


விலங்குகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.  தெரு நாய்களை பராமரிப்பதையே தனது கடமையாக கொண்டுள்ளார். பல தெரு நாய்களை தத்தெடுத்து வீட்டில் வைத்து தன்னுடைய குழந்தைகள் போல வளர்த்து வருகிறார். எங்காவது தெரு நாய்களை கொடுமைப்படுத்துகிறார்கள் என்றால் அந்த இடங்களில் எல்லாம் சந்தியா தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்.


விலங்குகள் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ள நடிகை சந்தியா தற்போது வீடியோ ஒன்றை அழுதுகொண்டே பேசியுள்ளார். 



"கடவுள் படைத்த அத்தனை ஜீவன்களும் கடவுளுக்கு குழந்தைகள் தானே. அப்போ இந்த மாதிரி பலி கொடுத்தா தான் கடவுள் சந்தோஷப்படுவாரா? இது பக்தியா? இல்ல பைத்தியமா? மனுஷங்க எல்லாரும் அழிஞ்சு போகணும்னு நான் மனசார வேண்டிக்கிறேன். நரபலி கொடுக்குறது வந்து illegal. ஆனா இந்த மாதிரி பண்ணலாமா? ஒரு மாட அம்மா மாதிரின்னு சொல்றோம். தாயை பலிகொடுக்கலாமா? அந்த ஜீவன்கள் எல்லாம் மனுஷங்களை விட எவ்வளவோ புனிதமானது" என சொல்லி கண்கலங்கி சந்தியா வெளியிட்டுள்ள இந்த வீடியோ பார்வையாளர்களிடம் விவாதத்தை கிளப்பியுள்ளது.


 






“எந்த இடத்தில் கோயிலில் மாட்டை பலிகொடுத்தார்கள்” என கேள்வி எழுப்புகிறார்கள் நெட்டிசன்கள். அதே வேளையில் கோயில் பலி, மாமிச உணவுக்கான விலங்குகள் என இவையனைத்தும் உரிமையின்பாற்பட்டது எனவும் தெரிவித்து வருகிறார்கள். விலங்குகளை பலி கொடுப்பது குறித்து சந்தியா மனம் வருந்தி இந்த வீடியோ வெளியிட்டுள்ளார்.