திப்பு சுல்தான் பற்றி எடுக்கவிருந்த படத்தை கைவிடுவதாக பிரபல தயாரிப்பாளர் சந்தீப் சிங் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக இந்திய திரையுலகைச் சேர்ந்தவர்களிடம் கேட்டால், இங்கு படைப்பு சுதந்திரம் இல்லை என சொல்வார்கள். எதையாவது பற்றி படம் எடுத்தால் மிரட்டல் வருவது வாடிக்கையாகி விட்டது. அதிலும் ஏதாவது தலைவர்கள், சமூகம், மதம் பற்றிய படங்கள் என்றால் சொல்லவா வேண்டும். வரலாற்றை மாற்றி விட்டார்கள், தவறான கருத்தை தெரிவிக்கிறார்கள் என ஒரு கும்பல் கிளம்பி விடும். உண்மையில் வரலாறு தவறாக சித்தரிக்கப்படுவதை சொல்வதை காட்டிலும், பப்ளிசிட்டிக்காக சிலர் செய்வது ஒட்டுமொத்தமாக படத்தை விமர்சனம் செய்பவர்கள் மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்தி விடுகிறது.
இப்படியான நிலையில் 'பிஎம் நரேந்திர மோடி', 'சர்ப்ஜித்' உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் சந்தீப் சிங். இவர் அடுத்ததாக மன்னர் திப்பு சுல்தானின் வாழ்க்கையை படமாக எடுக்க உள்ளதாக கடந்த மே மாதம் அறிவித்தார். இதற்கான முன்னோட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், இன்று சமூக வலைத்தளமான ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் திப்பு சுல்தான் தொடர்பான படத்தை கைவிடுவதாக தெரிவித்தார்.
அந்த அறிக்கை, ஹஸ்ரத் திப்பு சுல்தான் பற்றிய படம் எடுக்கப்படாது என்ற வார்த்தைகளுடன் தொடங்குகிறது. மேலும் அதில், எனது குடும்பம், நண்பர்கள் மற்றும் என்னை அச்சுறுத்துவதையோ அல்லது தவறாக பேசுவதையோ தவிர்க்குமாறு எனது சக சகோதர சகோதரிகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நான் வேண்டுமென்றே யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்தியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எல்லா நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக நம்புகிறவன் நான். அதனால் உங்கள் உணர்வுகளை புண்படுத்துவது என் நோக்கமில்லை. இந்தியர்களாகிய நாம் என்றென்றும் ஒன்றுபடுவோம், எப்போதும் ஒருவருக்கு ஒருவர் மரியாதை கொடுப்போம்!’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
முன்னதாக திப்பு சுல்தான் படத்தின் அறிவிப்பு நிகழ்வில் பேசிய சந்தீப் சிங், ‘திப்பு சுல்தானின் உண்மை நிலையை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். பிரதமர் நரேந்திர மோடி, வீர சாவர்க்கர், அடல் அல்லது பால் சிவாஜி போன்ற எனது தயாரிப்பிலான படங்கள் எப்போதும் உண்மைக்கு ஆதரவாக நிற்கின்றன. நேர்மையாக சொல்கிறேன், அவர் ஒரு சுல்தான் என்று அழைக்கப்படுவதற்கு கூட தகுதியற்றவர். வரலாறு பாடப்புத்தகங்களில் காட்டப்பட்டுள்ளபடி அவரை ஒரு துணிச்சலானவர் என்று நான் நினைத்துக் கொண்டேன். ஆனால் அவரது தீய பக்கம் யாருக்கும் தெரியாது. எதிர்கால சந்ததிக்கு அவருடைய இருண்ட பக்கத்தை நான் வெளிப்படுத்த விரும்புகிறேன்’ என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.