இந்தியாவில் மலிவு விலையில் கிடைக்கும் டாப் 5 மின்சார வாகனங்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 


மின்சார வாகனங்கள்:


அதிகரித்து வரும் எரிபொருட்களின் விலை உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் மின்சார வாகன பயன்பாட்டில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்க மின்சார வாகனங்களுக்கு மத்திய அரசு வழங்கும் பல்வேறு சலுகைகளும், மின்சார வாகனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் மலிவு விலையில் கிடைக்கும் சில மின்சார கார்களின் விவரங்களை இங்கு காணலாம்.


டாடா டியாகோ:


டாடா நிறுவனம் தனது மலிவு விலை மின்சார காரான டியாகோவை கடந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. மின்சார ஹேட்ச்பேக்கான இந்த காரின் விலை ரூ.8.69 லட்சத்திலிருந்து ரூ.11.99 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. XE, XT, XZ+ மற்றும் XZ+ Tech LUX என்ற 4 வேரியண்ட்களில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது.  19.2kWh மற்றும் 24kWh என்ற பேட்டரி ஆப்ஷன்களில் இந்த கார் கிடைக்கிறது. பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 60 கிலோ மீட்டர் எனும் வேகத்தை, டாடா டியாகோ கார் 5.7 விநாடிகளில் எட்டும். 


டாடா டைகோர்:


மலிவு விலை மின்சார கார்களின்  பட்டியலில் இரண்டாவது இடத்தை டாடா நிறுவனத்தின் டைகோர் பிடித்துள்ளது. செடான் வகையிலான இந்த காரின் விலை இந்திய சந்தையில் ரூ.12.49 லட்சத்திலிருந்து ரூ.13.75 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. XE, XT, XZ+ மற்றும் XZ+ Tech LUX எனும் நான்கு வேரியண்ட்களில் இந்த கார் கிடைக்கிறது. இதில் இடம்பெற்றுள்ள லித்தியம் -அயர்ன் பேட்டரி 74 குதிரை திறன் மற்றும் 170Nm எனும் டார்க் இழுவிசையை கொண்டுள்ளது.


டாடா நெக்‌ஷான் இவி பிரைம் & மேக்ஸ்:


மலிவு விலை மின்சார கார்களின்  பட்டியலில் மூன்றாவது இடத்தையும் டாடா நிறுவனத்தின் கார் தான் பிடித்துள்ளது. அதன்படி, டாடா நெக்‌ஷான் மின்சார வாகனத்தின் தொடக்கவிலை ரூ. 14.49 லட்சமாகவும், அதிகபட்சமாக ரூ.20.04 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யுவி மாடல் கார் XM, XZ+ XZ+ LUX எனும் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. நெக்‌ஷான் ஈவி பிரைமில் 30.2 kWh லித்தியம் அயன் பேட்டரியும், நெக்‌ஷான் ஈவி மேக்ஸில் 40.5kWh லித்தியம் - அயன் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.  


மஹிந்திரா எக்ஸ்யுவி 400:


மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி 400 மாடல் மலிவு விலை மின்சார வாகனங்களின் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. எஸ்யுவி ரகத்தை சேர்ந்த இந்த காரின் தொடக்கவிலை ரூ.15.99 லட்சத்திலிருந்து அதிகபட்சமாக ரூ.19.19 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 39.4kW திறன் கொண்ட லித்தியம் - அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை, இந்த கார் வெறும் 8.3 விநாடிகளில் எட்டிவிடும். இது EC மற்றும் EL என்ற இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.


MG ZS EV:


இந்த மலிவு விலை மின்சார கார்களின் பட்டியலில் எம்ஜி நிறுவனத்தின் ZS EV மாடல் காரும் இடம்பெற்றுள்ளது. இதன் விலை ரூ.22.98 லட்சத்திலிருந்து ரூ.26.99 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  எக்சைட் மற்றும் எக்ஸ்குளூசிவ் என இரண்டு வேரியண்ட்களில் இந்த கார் கிடைக்கிறது. 44.5kWh மற்றும் 50.3kWh என்ற இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களில் இந்த கார் கிடைக்கிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI