தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மின் கம்பிகளில் அடிபட்டு அரிய வகை பாலூட்டிய பறவையான பழந்தின்னி வவ்வால்கள் அழிந்து வருகின்றன. இவற்றை பாதுகாக்க இப்பகுதியில் சரணாலயம் அமைக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




தூத்துக்குடி மாவட்டத்தின் சிறப்புகளில் பழந்தின்னி  வவ்வால்களும் உண்டு.  ஸ்ரீவைகுண்டம், புதுக்குடி, சோனகன்விளை, சாத்தான்குளம் போன்ற மாவட்டத்தின் பகுதிகளில் பழம் தின்னி  வவ்வால்கள் ஆயிரக்கணக்கானவை கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. இவைகள் அனைத்தும் உயரமான மருத மரங்களில் வசிக்கின்றன. பகல் முழுவதும் மரத்தில் தலைகீழாக தூங்கிக் கொண்டிருக்கும் இந்த வவ்வால்கள் இரவு நேரங்களில் இங்கிருந்து உணவுக்காக அருகில் இருக்கும் காடுகள், தோட்டங்கள் மற்றும் மலைப்பகுதிகளுக்குச் செல்லும். மேலும் இங்கிருந்து  வவ்வால்கள்  கூட்டம் கூட்டமாக இரவு நேரங்களில் கடல் கடந்து இலங்கை வரை சென்று இறை தேடிவிட்டு அதிகாலையிலேயே தங்களது இருப்பிடங்களுக்கு வந்து விடுவது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.




பாலூட்டி இனத்தைச் சேர்ந்த இந்த அரிய வகை  வவ்வால்கள் வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொடர்ந்து குறைந்து வருகின்றன. அண்மைக்காலமாக ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மின் கம்பியில் சிக்கி உயிரிழக்கும் வவ்வால்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களில் மட்டும் புதுக்குடி, சாத்தான்குளம் சோனகன்விளை உள்ளிட்ட பகுதிகளில் வவ்வால்கள் மின்கம்பிகளில் இறந்த நிலையில் தொங்குவதை காண முடிகிறது. இது இயற்கை ஆர்வலர்கள், பறவை ஆர்வலர்களை கவலை அடைய செய்துள்ளது.




இதுகுறித்து சிவகளை காடு போதல் இயற்கை பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாணிக்கம் கூறும்போது, ”தூத்துக்குடி மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றான பழந்தின்னி வவ்வால்கள் சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு, உயிரின பெருக்கம் போன்றவற்றில் இந்த வவ்வால்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அண்மைக்காலமாக இந்த வவ்வால்கள் மின்கம்பியில் சிக்கி அதிகமாக உயிர் இழக்கின்றன. தற்போது வீசி வரும் கடும் காற்று காரணமாக இரவில் இறை தேடி சென்று விட்டு திரும்பி வரும்போது மின் கம்பிகளில் சிக்கிக் கொள்கின்றன.மெல்லிய  இறகுகளை  கொண்டதாக இருப்பதால் வவ்வால்கள் எளிதாக மின் கம்பியில் சிக்கி உள்ளன. மின்சாரம் தாக்கி உயிரிழப்பதை விட இரு கம்பிளுக்கு இடையே சிக்கி அதிக வவ்வால்கள் உயிரிழக்கின்றன. மேலும் இறந்த வவ்வால்கள் மின்கம்பியில் அப்படியே தொங்கிக் கொண்டிருப்பதால் அதனை காணும் மற்ற வவ்வால்கள் அந்த பகுதிக்கு வந்து உயிர் இழக்கின்றன. வவ்வால்கள் மின்கம்பியில் சிக்கி இருப்பது ஆங்காங்கே காணப்படுகிறது.


இந்த அரியவகை வவ்வால்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வவ்வால்கள் கூட்டம் கூட்டமாக செல்லும் பாதையில் காணப்படும் மின் கம்பிகளில் பிளாஸ்டிக் குழாய்களை மாட்டி விட வேண்டும். அதன் மூலம் வவ்வால்கள் சிக்கி உயிரிழப்பதை தடுக்கலாம்.மேலும் இறந்த வவ்வால்களை உடனுக்குடன் அகற்றினால் உயிரிழப்பதை தடுக்க முடியும். பழமையான மரங்கள் பல அழிந்து வருவதால் வவ்வால்களுக்கு இருப்பிடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே தீ விபத்துகளில் மருத மரங்கள் அழிவதை தடுக்க வேண்டும்.மேலும் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சாம்பல் நிற அணியில் சரணாலயம் அறிவித்தது போல் ஸ்ரீவைகுண்டம்  பகுதியில் வவ்வால்கள் சரணாலயமாக அரசு அறிவித்த நடவடிக்கை வேண்டும்” என்றார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.