தமிழ் சினிமாவின் ஆக்ஷன் கிங் என கொண்டாடப்படும் அர்ஜுனுக்கு அடுத்தபடியாக ஏராளமான ஆக்சன் படங்களில் நடித்தவர் நடிகர் விஷால். 2005-ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் மெகா ஹிட் வெற்றி பெற்ற படங்களின் பட்டியலில் முக்கிய பங்கு வகித்தது 'சண்டக்கோழி' திரைப்படம். இயக்குநர் லிங்குசாமியின் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் காதல், ஆக்ஷன் கலந்த இந்த அருமையான திரைப்படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 



விஷால் - லிங்குசாமி


திருப்புமுனையாக இருந்த திரைப்படம் :


ஆனந்தம், ரன் போன்ற சூப்பர் ஹிட் படங்களாக அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மனங்களை கொள்ளை கொண்ட இயக்குனர் லிங்குசாமியின் வெற்றிப்பாதையில் 'ஜி' திரைப்படம் மூலம் சற்று சறுக்கல் ஏற்பட்டது. இருப்பினும் தளராமல் சடார் என வீறிட்டு எழுந்து ஒரு மெகா ஹிட் திரைப்படத்தை கொடுத்தார் லிங்குசாமி. அது தான் சண்டக்கோழி திரைப்படம். கிட்டத்தட்ட 200 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது. லிங்குசாமி மற்றும் விஷால் இருவரின் திரை வாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் சண்டக்கோழி என்றால் அது மிகையல்ல. 






சண்டைக்கு நடுவே கொஞ்சம் ரொமான்ஸ் :


நண்பரின் வீட்டிற்கு செல்லும் விஷால் அங்கு எதிர்பாராத விதமாக வில்லனுடன் மோத கதை சூடுபிடிக்கிறது. வில்லன் ஹீரோவை பழிவாங்குவதற்காக அவனுடைய ஊரான மதுரைக்கு செல்ல அதற்கு பிறகு அங்கு நிகழும் பரபரப்பான காட்சிகள்தான் படத்தின் திரைக்கதை. இடையிடையில் மீரா ஜாஸ்மின் துறுதுறு நடிப்பும், சேட்டையும் அனைவரையும் கவர்கிறது. ஒரு சில காதல் காட்சிகள்தான் என்றாலும் அவை அனைத்துமே ரசிக்கப்பட்டன. மதுரைக்காரராக ராஜ்கிரணின் நடிப்பு என்றும்போல் கஞ்சி போட்டதுபோல கரடு முரடாக இருந்தது.  இப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது ஜீவா, நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை. அதிலும் தாவணி போட்ட தீபாவளி பாடல் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக அமைந்த சூப்பர் ஹிட் பாடல். 






வீக்கான சண்டக்கோழி 2 :


சண்டக்கோழி திரைப்படத்தின் அமோகமான வெற்றியை தொடர்ந்து மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. மேலும் 2018ம் ஆண்டு   இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியானாலும் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.