’அவதார் 2’ படம் நாளை (டிச.16)ன் இந்தியாவில் வெளியாக உள்ள நிலையில் இணையத்தில் முழு படமும் வெளியிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இயக்குனர் ஜேம்ஸ் காமரூனின் கனவுத் திரைப்படமான அவதார் படத்தின் இரண்டாம் பாகமான ‘அவதார் த வே ஆஃப் வாட்டர்’ நாளை இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெளியாக உள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ’அவதார்’ படத்தின் முதல் பாகம் வெளியானது.


தொழில்நுட்பத்தில் மிரட்டி உலக அளவில் சக்கைபோடு போட்டு வசூல் வேட்டை நடத்திய இந்தப் படம். சிறந்த ஒளிப்பதிவு, விஷூவல் எபெக்ட்ஸ், கலை அமைப்பு ஆகிய 3 பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளை வென்றது.


அதனைத் தொடர்ந்து இன்னும் மிக பிரம்மாண்டமாய், பெரும் பொருட்செலவு, தொழில்நுட்ப வசதிகள் என அதிக காலம் எடுத்து அடுத்த தளத்துக்கு படத்தை எடுத்துச் சென்று சுமார் 13 ஆண்டுகள் அவதார் படத்தின் இரண்டாம் பாகத்தை படக்குழுவினர் செதுக்கி வந்தனர் என்றே சொல்ல வேண்டும்.


 






ஆங்கிலம் மட்டுமின்றி இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில்  நாளை இந்தியாவில் இப்படம் வெளியாக உள்ள நிலையில், முழு படமும் முன்னதாக இணையத்தில் வெளியாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வந்துள்ளன.


அவதார் திரைப்படம் பெல்ஜியம், டென்மார்க், எகிப்து, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங், இந்தோனேசியா, இத்தாலி, நெதர்லாந்து, தென் கொரியா மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளில் நேற்று (டிச.14) வெளியானது. ஆஸ்திரேலியா, பிரேசில், இஸ்ரேல், மெக்சிகோ, போர்ச்சுகல், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இன்று (டிச.15) வெளியானது.


இந்நிலையில் முழு படமும் இணையத்தில் வெளியான சம்பவம் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.