சமுத்திரக்கனி இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நெறஞ்ச மனசு. இந்த படத்தில் நாயகனாக கேப்டன் விஜயகாந்த் நடித்திருந்தார். அந்த படத்தில் விஜயகாந்துடன் இணைந்து பணியாற்றியது குறித்து நேர்காணல் பகிர்ந்துக்கொண்ட சமுத்திரக்கனி , ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சில நெகிழ்ச்சியான சம்பவங்களை நினைவுக்கூர்ந்துள்ளார்.




அதில் ” என்னை விஜயகாந்த் அவர்கள் தம்பியாகத்தான் பார்த்துக்கிட்டாரு. அவ்வளவு அன்பு பாசம். தினம் 100 பேர் , 150 பேர் அவரை பார்க்க வருவாங்க. ஃபோட்டோ எடுப்பாங்க. சலிக்காமல்.. எல்லோரிடமும் பயணப்பட்டுக் கொண்டே இருப்பாரு. அற்புதமான ஒரு மனிதர் , மக்களுக்கு ஏதாவது ஒரு நல்லது பண்ணிடனும்னு ஆசைப்பட்டாரு. எனக்கு ஒரு சம்பவம் நல்லாவே நியாபகம் இருக்கு. உடுமலைப்பேட்டையில ஒரு ஹெவியான சீன் ஷூட் பண்ணிட்டு இருந்தேன். அப்போ ஒரு வயதான கிழவி , எல்லோரையும் இடித்துக்கொண்டு முன்னால வர போராடிக் கொண்டுருந்தாங்க. யாரையும் விடவே இல்லை. அப்போ விஜயகாந்த் சார் நடுவில் நின்றுக்கொண்டிருந்தார். நான் அந்த பாட்டியை பார்த்துவிட்டு , அவரை கூப்பிட்டு அண்ணே..இந்த பாட்டி ஏதோ சொல்ல வற்றாங்கன்னு சொன்னேன். உடனே ஏய்.. வழி விடுடா.. அப்படினு சொன்னதும் அந்த பாட்டி , அவரை இறுக்கமா கட்டிப்பிடிச்சுக்கிட்டாங்க. அவருக்கு முத்தமெல்லாம் கொடுக்குறாங்க. அவரும் கட்டிப்பிடிச்சுக்கிட்டாரு. என்னானு கேட்டது. அய்யா.. இந்த ரேஷன் கடையில அரிசி எல்லாம் குறைச்சு கொடுக்குறானுக... நீ வந்து என்னானு கேட்டு அடி அப்படினு சொல்லுறாங்க. அவர் சிரிச்சுக்கிட்டு , அப்படியெல்லாம் அடிக்க முடியாது. நான் அரசியலுக்கு வருவேன். ஓட்டு போடு , ஜெயிக்க வை! அதன்பிறகு வந்து கேட்கிறேன்  அப்படினு சொல்லிட்டு, அவங்களுக்கு அரிசி கொடுத்து அனுப்பி வச்சாரு. இது போல நிறைய சம்பவங்கள் இருக்கு. நெறஞ்சமனசு  படத்திற்கு பிறகு அவர் அரசியலுக்கு வந்துட்டாரு. அதன் பிறகு பெருசா அவரை பார்க்க முடியவில்லை. ஆனால் அவரது மகன் சண்முக பாண்டியனுடன் ஒரு படம் நடித்தேன். அதோட பூஜையில சந்தித்தேன். அப்போது நினைவு படுத்தி அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினேன். நல்லா இருக்கியானு கேட்டாரு. அதன் பிறகு அவருக்கு சின்ன சின்ன விஷயங்கள் கூட நினைவுக்கு வரவில்லை என்பதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. எவ்வளவு வசனம் பேசியவர் , செட்டுக்கு வருவதற்கு முன்னதாகவே அங்கு நடந்த எல்லாமே அவருக்கு தெரிந்திருக்கும். அவரை போன்ற மனிதர்கள் இருந்துக்கிட்டே இருக்கனும் , இயங்கிக்கிட்டே இருக்கனும் , மீண்டும் அவருடன் இணைந்து பல படங்கள் நான் செய்ய வேண்டும் என்பதுதான் எனது ஆசை “ என்றார் சமுத்திரக்கனி.