மதுரை மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழாவில் தேசிய மருத்துவ கமிஷன் பரிந்துரைத்த, ‘மகரிஷி சரக் சபத்’ என்ற சமஸ்கிருத வாக்கிய உறுதிமொழியை மாணவர்கள் எடுத்ததால், மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ரத்தினவேல் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன், மதுரை மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்,  அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், 2018ஆம் ஆண்டு மாணவர்கள் நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.  இந்நிலையில், பாரம்பரிய ஹிப்போகிராடிக் உறுதிமொழிக்கு பதிலாக, இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட சமஸ்கிருத வார்த்தைகள் கொண்ட உறுதிமொழியை ஆங்கிலத்தில் மாணவர்கள் எடுத்துள்ளனர்.



 பாரம்பரிய உறுதிமொழிக்கு பதிலாக சமஸ்கிருத உறுதிமொழி எடுத்ததாக தகவல் தீ போல் பரவிய நிலையில், மருத்துவ கல்வி இயக்ககம் டீன் ரத்தினவேலுவை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக விவகாரம் தொடர்பாக மருத்துவ கல்லூரி இயக்குநர் நாராயண பாபு, ரத்தினவேல், துணை முதல்வர் தனலட்சுமி மாணவர் அமைப்பு தலைவர் ஜோதிஸ் குமாரவேல் உள்ளிட்டோரிடம் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டது குறிப்பிடதக்கது. இந்நிலையில் அதிமுக முன்னாள்  அமைச்சர் இது குறித்து ட்வீட் செய்துள்ளார்.


 




அதில்.., மதுரை மருத்துவ கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு விவகாரம் பேசுபொருளாகி இருக்கிறது. வழக்கத்துக்கு மாறாக நடைபெற்ற இச்சம்பவம் குறித்து துறைரீதியான விசாரணை அவசியம். ஆனால், மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் ரத்தினவேலு அவர்களை காத்திருப்போர் பட்டியலில் மாற்றியிருப்பது ஏற்புடையதல்ல. ஏனெனில், 2017-ல் தென் தமிழகத்திலேயே முதன்முறையாக நம் மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் இருதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி அம்மா அரசின் பாராட்டைப் பெற்ற மருத்துவர். அதுமட்டுமல்லாது, கோவிட் பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றி அனைவரின் நன்மதிப்பை பெற்றவர். ஆகவே, மதுரை மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் தமிழ்நாடு மருத்துவர் சங்கம் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த முடிவை மறுபரிசீலனை செய்து, முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்பதே அனைவரின் விருப்பம்.” என தெரிவித்துள்ளார்.