நடிகையர் திலகம் படத்தில் பெரிதும் ரசிக்கப்பட்ட நடிகை சமந்தா - விஜய் தேவரகொண்டா(Samantha - Vijay Devarakonda) ஜோடி, இரண்டாம் முறையாக ஜோடி சேர்ந்துள்ள திரைப்படம் ‘குஷி’


வரும் செப்டெம்பர் 1ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில், ஷிவ நிர்வாணா இப்படத்தை இயக்குகிறார். சச்சின் கெதெக்கர், ராகுல் ராமகிருஷ்ணா, லக்‌ஷ்மி உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், பிரபல மலையாள இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.


இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் தான் வெளியாகி கவனமீர்த்தது. இஸ்லாமிய பெண் என சமந்தாவை நினைத்து  அவருடன் காதலில் விஜய் தேவரகொண்டா விழும் நிலையில், அவர் ஒரு பிராமண வீட்டுப் பெண் எனத் தெரிய வருகிறது. தொடர்ந்து பல சிக்கல்கள், எதிர்ப்புகளை மீறி இருவரும் திருமணம் செய்துகொள்ளும் நிலையில், காதல் வாழ்க்கையில் ஜெயித்தது போல், திருமண வாழ்க்கை இவர்களுக்கு இனிமையாக அமைந்ததா என்பதை அடிப்படையாகக் கொண்டு இப்படம் அமைந்துள்ளது.


இப்படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில், பட ப்ரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நடிகை சமந்தாவும்  - விஜய் தேவரகொண்டாவும் பல மேடைகளில் தெலுங்கு ரசிகர்களின் முன் ப்ரொமோஷன் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.


அந்த வகையில் முன்னதாக சமந்தா - விஜய் தேவரகொண்டா ஜோடி மேடை ஒன்றில் தங்கள் கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தி நடனமாடிய வீடியோ ரசிகர்களை வாயைப் பிளக்க வைத்து கவனமீர்த்து வருகிறது.


சட்டையைக் கழற்றியபடி, சமந்தாவை நோக்கி கையசைத்தபடியும் வந்த விஜய் தேவரகொண்டா, குஷி பட பாடலுக்கு, மேடையில் அவரை காதலுடன் தூக்கிச் சுற்றி ரொமான்ஸ் செய்த நிலையில், இந்த வீடியோ இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.






2004ஆம் ஆண்டு வெளியான த நோட்புக் படத்துக்காக  ஹாலிவுட்டில் சிறந்த முத்தத்துக்காக விருது வென்றனர் அப்படத்தின் நடிகர்களான ரயான் கோஸ்லிங், ரேச்சல் மெக் ஆடம்ஸ் ஜோடி. அப்போது ரயான் கோஸ்லிங் இதேபோல் மேடையில் சட்டையைக் கழற்றியபடியும் நடிகை ரேச்சல் மெக் ஆடம்ஸை தூக்கிச் சுற்றியும் தன் கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தினார். அந்த ப்ரொமோஷன் யுக்தியை டோலிவுட்டில் பயன்படுத்தியுள்ளனர் நடிகர் விஜய் தேவரகொண்டா - சமந்தா ஜோடி.


 



முன்னதாக இப்படத்தின் என் ரோஜா நீயா, ஆராத்யா ஆகிய பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. நடிகை சமந்தா ஒருபுறம் மயோசிட்டிஸ் பாதிப்பால் அவதியுற்று வரும் நிலையில், மற்றொருபுறம் நடிப்பில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுத்துள்ளார். இதனிடையே குஷி பட ப்ரொமோஷன் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார்.