இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகியோர் விவாகரத்து செய்யப்போவதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். சமந்தா - நாகசைதன்யாவின் விவாகரத்துக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது. ஆனால், அவ்வாறு தெரிவிக்கப்படும் காரணங்களை இருவரும் மறுத்து வந்தனர். விவாகரத்து குறித்த பதிவிலேயே இருவரும் தெளிவாக விளக்கம் அளித்திருந்தனர்.
இந்நிலையில், சமந்தாவின் ஸ்டைலிஸ்ட் உதவியாளர் ஒருவர்தான் சமந்தா - சைதன்யா விவாகரத்திற்கு முக்கிய காரணம் என சில யூட்யூப் சேனல்கள் செய்தி பரப்பி வந்தன. இது குறித்து சமந்தா தரப்பில் பெரிதும் கண்டுக்கொள்ளப்படாமல் இருந்தது. ஆனால், ஸ்டைலிஸ்ட் ப்ரீத்தம் ஜூகல்கார் இது குறித்து பேசியுள்ளார். அதில், “சமந்தா என் சகோதரியைப் போல. சமந்தா - நாகசைதன்யாவுக்கு நெருக்கமானவர்களுக்கு எங்களது உறவைப் பற்றி தெரியும். நாக சைதன்யாவுக்கு நன்றாகவே தெரியும். இந்த சூழலில், சமந்தா - நாக சைதன்யா விவாகரத்திற்கு நான் காரணம் என சில மீடியாக்கள் சொல்லி வருவது வருத்தம் அளிக்கிறது. சமந்தா - நாக சைதன்யாவின் ரசிகர்கள் என்னை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி வருகின்றனர். இடைவெளி இல்லாமல் எனக்கு அழைப்புகள் வந்துகொண்டே இருக்கின்றது. இது குறித்து சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்துள்ளேன். எனினும், சகோதரி சமந்தாவுக்காக இந்த டிரால், மீம்ஸ், மிரட்டல்களை சமாளித்து கடந்து செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, விவாகரத்து அறிவிக்கப்பட்ட நிலையில் தன் மீதான தொடர் வதந்தி குறித்தும், தனக்கு ஆதரவாக நிற்பவர்களுக்கு நன்றி தெரிவித்தும் நடிகை சமந்தா உணர்ச்சிகரமாக ஒரு ட்வீட்டை பதிவிட்டிருந்தார்.
அதில், ''எனக்கு எதிரான வதந்திகளுக்கு எதிராக நிற்கும் அனைவருக்கும் நன்றி. என் மீதான உங்களின் அக்கறை என்னை திக்குமுக்காடச் செய்கிறது. என் மீது பல வதந்திகள் பரபப்படுகின்றன. நான் இன்னொருவர் மீது காதல் வயப்பட்டதாகவும், குழந்தை வேண்டாமென்றும் கூறியதாகவும், கருக்கலைப்பு செய்ததாகவும் சிலர் கூறுகிறார்கள். விவாகரத்து என்பதே வேதனையான ஒன்றுதான். தனி ஆளாக அந்தக் காயத்திலிருந்து மீள எனக்கு நேரம் எடுக்கும். இதற்கிடையே என் மீதான தொடர் வதந்திகளும், தனி நபர் தாக்குதலும் தொடர்கிறது. ஆனால் இதுவெல்லாம் என்னை ஒருபோதும் காயப்படுத்தாது'' என்று தெரிவித்திருந்தார்.
சமந்தா தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டபோதும், விவாகரத்துக்கு காரணமானவை இவைதான் என பொய் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது.