திமுகவின் கூட்டணி குறித்து காலம் தான் பதில் சொல்லும்,தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பான ஆட்சி செய்கிறார் என விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேட்டி.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேமுதிக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கலந்துகொண்டு நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி இதோ:
தேமுதிக அதே எழுச்சியோடுதான் செயல்படுகிறது .வெற்றி தோல்வி என்பது வந்து போகும். மீண்டும் தேமுதிகவை தூக்கி நிறுத்துவோம். மக்கள் எங்களை தேர்தல் நேரத்தில் அங்கீகரிக்காததால் தேர்தலில் தோல்வியுற்றோம். வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது. தொண்டர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள்.வருங்காலத்தில் தேமுதிக ஆரம்பித்ததன் லட்சியம் நோக்கி பயணிப்போம்.
திமுகவின் கூட்டணி குறித்து காலம் தான் பதில் சொல்லும். தமிழக முதல்வர் ஸ்டாலின் நல்ல திட்டங்களை கொண்டு வந்து சிறப்பான ஆட்சி செய்கிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை நலமாக உள்ளது. பழைய நிலைக்கு திரும்ப இன்னும் கொஞ்ச நாள் ஆகும். எங்களால் முடிந்த முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். மக்களை சந்திக்க வேண்டிய நேரத்தில் கேப்டன் விஜயகாந்த் சந்திப்பார், என்றார்.
பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தொண்டர்களிடம் பேசினார். இதோ அவரது பேச்சு...
‛‛எனது தந்தை விஜயகாந்த் எவ்வளவோ மக்கள் பணி செய்து விட்டார். அவர் ஓய்வெடுக்கட்டும். அவர் பணியை செய்வதற்காக நான் வந்துள்ளேன். எனது தோலில் சுமந்து இந்த கட்சியை கொண்டு செல்வேன்,’’ என்றார்.
பின்னர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுரைக்காய்பட்டி பகுதியில் தேமுதிக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தொண்டர்களிடம் பேசுகையில்,
‛‛எனது ஆசை தேவைகளை உதறிவிட்டு எனது தந்தை விஜயகாந்தை நம்பியுள்ள தொண்டர்களுக்காக மட்டுமே நான் களத்தில் நிற்கிறேன். கேப்டனை என்னதான் தூக்கி எறிந்தாலும் சுவற்றில் எறிந்த பந்து போல் மீண்டும் மக்கள் முன்னால் வந்து நிற்பார். தேமுதிக கட்சி யாருக்கும் அடிமை இல்லை. யாருக்கும் அடி பணிந்து போகாது. அதிமுக 60 சீட்டில் தோற்றதற்கு காரணம் தேமுதிக கூட்டணியில் இல்லாததே. சிங்கம் குகைக்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான். எனது தந்தை எவ்வளவோ மக்கள் பணி செய்து விட்டார் அவர் ஓய்வெடுக்கட்டும். அவர் பணியை செய்வதற்காக நான் வந்துள்ளேன். எனது தோலில் சுமந்து இந்த கட்சியை கொண்டு செல்வேன்,’’ என்றார்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள் சில...