நடிகை சமந்தா நடிப்பில், இயக்குநர்கள் ஹரி -ஹரிஷ் இயக்கத்தில் இயக்கியுள்ள யசோதா படம். ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரித்த இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ரமேஷ், முரளி சர்மா சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா உட்பட பலரும் நடித்துள்ளனர். கர்ப்பமாக இருக்கும் சமந்தா எதிர்கொள்ளும் சவால்களே இப்படத்தின் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர், போஸ்டர்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
மணிசர்மா இசையில் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள யசோதா படம் முதலில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் விளம்பரத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நவம்பர் 11 ஆம் தேதி படம் வெளியானது. வுமன் சென்ட்ரிக் திரைப்படமான யசோதா எதிர்பார்ப்பையும் தாண்டி சாதனை படைத்துள்ளது. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.
நடிகை சமந்தா இப்படத்தில் ஒரு வாடகை தாய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனால் வாடகை தாய் முறை குறித்த சில விவாதங்கள் இப்படத்தில் இடம் பெற்று இருந்தன. அதிலும் குறிப்பாக ஐதராபாத்தில் உள்ள EVA IVF மருத்துவமனையை மையாக வைத்து படமாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தங்களின் மருத்துவமனையை தவறாக சித்தரித்துள்ளதாக யசோதா திரைப்படத்திற்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் படதயாரிப்பு நிறுவனம், படத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனையை குறிக்கும் விவரங்களை மறைக்க ஒத்துக்கொண்டதையடுத்து அந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் யசோதா படம் அமேசான் ப்ரைமில் டிசம்பர் 9 முதல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது என்ற செய்தியை அமேசான் ப்ரைம் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது.