கின்னஸ் கிஷோர் இயக்கி, தயாரித்துள்ள திரைப்படம் தாதா. இந்தப்படத்தில் யோகிபாபு, நித்தின் சத்யா, மனோ பாலா, சிங்கமுத்து, நாசர், ரவிதுரை உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. அந்த போஸ்டர் படத்தின் கதாநாயகன் யோகிபாபுதான் என்பது போல வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நடிகர் யோகிபாபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்தப்படத்தில் நான் ஹீரோவாக நடிக்கவில்லை, நான் கதாநாயகனுக்கு நண்பனாகவே நடித்திருக்கிறேன் என்று பதிவிட்டார். இந்தப்பதிவு சமூக வலைதளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவிற்கு படக்குழு சார்பில் யோகிபாபுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிகிறது. அப்போது யோகி பாபு நான் படத்தில் "நாற்பது சீனா நடித்திருக்கிறேன்.. நாலு சீன்தானே நடித்திருக்கிறேன்" என்று கூறி விழாவுக்கு வர மறுத்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் விழாவிற்கு வருகை தந்த தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் யோகிபாபுவை கடுமையாக சாடினர்.
நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கின்னஸ் சதீஷ்குமார் பேசும் போது, “ நான் யோகிபாபுவிற்கு எவ்வளவோ செய்திருக்கிறேன். அவர் இந்தப்படத்தில் நாலு சீன் நடித்திருந்தால் நான் இந்த சினிமாவை விட்டு போய் விடுகிறேன். ஆனால் நாற்பது சீனுக்கு மேல் இருந்தால் அவர் இந்த சினிமாவை விட்டு போய்விடுவாரா?. இந்த படம் வியாபாரம் ஆகும் சமயத்தில், சம்பந்தபட்டவர்களிடம் போன் செய்து, இந்தப்படத்தை வாங்க வேண்டாம் என்று கூறினார்.
இதனால் படம் வியாபாரம் ஆகவில்லை. இன்னொரு விஷயம், அடுத்த படத்தில் நடிப்பதற்கு அவர் என்னிடம் பணம் வாங்கி இருக்கிறார். புதையல் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப்படத்தில் எனக்கு அவர் நடித்து தரவில்லை. இது குறித்து அவர் மீது நான் தயாரிப்பு சங்கத்தில் புகார் அளித்து இருக்கிறேன். அந்த புகாரில், என் படத்தில் நடிக்காமல், வேறு எந்த படத்திலும் அவர் நடிக்க கூடாது என குறிப்பிட்டு இருக்கிறேன் .” என்று பேசினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் டிவி லொல்லுசபா மனோகர் பேசும் போது, “ நாலு சீனோ, 40 சீனோ அது இங்க முக்கியமில்ல. நாலு சீனு நடிச்சாலும் மக்கள் மனதில் நிற்க வேண்டும். அவர்கள் நம்மை பாராட்ட வேண்டும். நான் விஜயுடன் வேலாயுதம் படத்தில் நடித்தேன். அதில் என்னுடைய கேரக்டர் பஜன்லால் சேட்.அந்தப்படத்தில் விஜய் என்னை சீன் முழுக்கவே பஜன் லால் சேட் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அப்படி இருக்கும் போது நான் ஒரு சீன் என்று சொல்ல கூடாது.
எல்லா சீனும் நான் வந்திருக்கிறேன். அவ்வளவு பெரிய ஹீரோ வாயில் இருந்து அந்த வார்த்தை வந்திருக்கிறது. சூழ்நிலை இப்படி இருக்கும் போது நீ எப்படி நிர்ணயிக்கலாம் நாலு சீனா.. நாற்பது சீனா என்பதை.. நீ அந்த வார்த்தையை சொன்னால் என்ன ஆகும் அப்படியென்றால், அந்தப்படத்தில் நடிக்கிற லைட் மேன் தொடங்கி தயாரிப்பாளார் வரை அனைவரும் நஷ்டம் அடைவர். அதனால் நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.” என்று பேசினார். இவரைப் போல தயாரிப்பாளர் JSK சதீஷ்குமார் உள்ளிட்ட பலரும் யோகிபாபுவை கண்டித்தனர். இதனிடையே யோகிபாபு தான் தாதா படத்தில் நடிக்க வில்லை, மணி என்ற படத்திலேயே நடித்தேன். ஆனால் அவர்கள் பெயரை மாற்றி என் படத்தை வைத்து வியாபாரம் செய்கிறார்கள என்று பேசிய ஆடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.