கோலிவுட் மற்றும் டோலிவுட் சினிமாக்களில் முன்னணி நடிகையாக திகழும் சமந்தா. தற்போது ஆன்மீக பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட சமந்தா சமீபத்தில் விவாகரத்து பெற்றார். அதனால் ஏற்பட்ட வேதனையுடன் சேர்த்து தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அவரின் விவாகரத்து குறித்தான வதந்திகளும் கூடுதல் மன உளைச்சலை சமந்தாவிற்கு ஏற்படுத்திவிட்டதாம். இதனால் ஆன்மீக பயணம் ஒன்றை மேற்க்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார். தற்போது பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி உள்ளிட்ட இடங்களுக்கும், கங்கை, யமுனை ஆற்றங்கரையோரங்களில் உள்ள ஆலயங்களுக்கும் அடுத்தடுத்து பயணங்களை மேற்க்கொண்டு வருகிறார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் சமந்தா.
முன்னதாக ரிஷிகேஷ் சென்ற சமந்தா அங்குள்ள மகரிஷி மகேஷ் யோகி ஆசிரமத்திற்கு சென்று ஆழ்நிலை தியான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அங்கிருந்த சில புகழ்பெற்ற புத்தகங்களில் இடம்பெற்ற பாடல்கள் குறித்து தான் அறிந்துக்கொண்டதாகவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். திருமதி உலக அழகி பட்டம் பெற்ற ஷில்பா ரெட்டி என்னும் தனது நெருங்கிய தோழி மற்றும் சில நண்பர்களுடன் இந்த ஆன்மீக பயணத்தில் ஈடுபட்டிருந்த சமந்தா ஆன்மீக பயணம் நிறைவடைந்ததாக தனது தோழி ஷில்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
மேலும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் “ நீ இப்போது எப்படியாக இருக்கிறாயோ அதற்கு மகிழ்ச்சியாக இரு! எதிர்காலத்தில் உனக்கு என்ன வேண்டுமோ அதற்கு போராடு “ என தனது அம்மா கூறியதாக ஒரு பதிவினை ஷேர் செய்துள்ளார். இதன் மூலம் தான் விவாகரத்து குறித்து எடுத்த முடிவு சரியானதுதான் என மறைமுகமாக தெரிவிக்கிறாரா சமந்தா என தெரியவில்லை. ஃபேமிலி மேன் என்னும் வெப் தொடர் மற்றும் சில மாடல் ஃபோட்டோ ஷூட்களில் சமந்தா அதீத கிளாமரை வெளிப்படுத்தினார் என கூறி நாக சைத்தன்யா குடும்பத்தில் புகைச்சல் ஏற்பட்டதாக தெரிகிறது. சமந்தாவோ அது நடிப்பு , எனது வேலை என விளக்கமளித்துள்ளார். ஆனால் அடுத்தடுத்து அந்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்கவே , அது விவாகரத்துவரை வந்துவிட்டதாக தெலுங்கு மீடியாக்கள் சில எழுதி வருகின்றனர். தற்போது சமந்தா காத்து வாக்குல ரெண்டு காதல், பிருந்தா ,சாகுந்தலா உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். விரைவில் பாலிவுட்டிலும் எண்ட்ரி கொடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.