விஜய் தேவரகொண்டா - சமந்தா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவாகிவரும் திரைப்படம் குஷி.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகி வரும் நிலையில், ஷிவ நிர்வாணா இப்படத்தை இயக்குகிறார்.
வரும் செப்டம்பர் 1ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விஜய் தேவரகொண்டா - சமந்தா ஜோடி ஏற்கெனவே ரசிகர்களை ஈர்த்து லைக்ஸ் அள்ளி வருகிறது.
ஏற்கெனவே கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான மகாநடி ( தமிழில் நடிகையர் திலகம்) தெலுங்கு படத்தில் இரண்டாவது லீட் ஜோடியாக சமந்தா - விஜய் தேவரகொண்டா இருவரும் இணைந்து நடித்தனர். அப்போதே இவர்களது கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இவர்கள் இருவரும் இரண்டாம் முறையாக இணைந்து நடிக்கும் குஷி படத்தை இருவரது ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டுள்ளனர்.
ரொமாண்டிக் காமெடியாக இந்தப் படம் தயாராகி வரும் நிலையில், சச்சின் கெதெக்கர், ராகுல் ராமக்கிருஷ்ணா உள்ளிட்டோர் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல மலையாள இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
முதலில் காஷ்மீரில் தொடங்கிய இந்தப் படத்தின் ஷூட்டிங், பின்னர் ஹைதராபாத், அலப்பி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இதனிடையே சமந்தா மயோசிட்டிஸ் பாதிப்பால் இடையே பாதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து படப்பிடிப்பு தடைபட்டது.
இந்நிலையில் குஷி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ‘என் ரோஜா நீயா’ பாடல் ஆகியவை வெளியாகி வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து உருக்கமான பதிவை சமந்தா பகிர்ந்துள்ளார்.
நம் வாழ்வின் சிறப்பான தருணங்கள், மோசமான தருணங்கள், இறுதி இடம், முதலிடம் பிடிக்கும் தருணங்கள், நம் வீழ்ச்சிகள், நம் உயரங்கள் என சில நண்பர்கள் தான் நம்முடன் எப்போதும் இணைந்திருப்பார்கள். இந்த ஆண்டு அற்புதமானது” என விஜய் தேவரகொண்டாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து உருக்கமான பதிவிட்டுள்ளார்.
சமந்தா - விஜய் தேவரகொண்டா இருவரது ஆன் ஸ்க்ரீன் ஜோடிக்கு ஏற்கெனவே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில், தற்போது இந்தப் பதிவு இவர்களது ரசிகர்களை மகிழ்வித்து லைக்ஸ் அள்ளி வருகிறது.
முன்னதாக விஜய் தேவரகொண்டா, சமந்தா மீதான தன் அன்பை வெளிப்படுத்தும் வகையில், அவருக்குத் தெரியாமல் ஷூட்டிங் தளத்தில் ரீல்ஸ் எடுத்து வீடியோ பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.