ஜூன் மாதம் பிறந்தாலே திரை ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் காரணம் இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் ஜூன் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது.  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்த ஒப்பற்ற இசை மேதை. கடந்த 4 தசாப்தங்களாக அவரின் இந்த திரைப்பயணத்தில் எண்ணற்ற இனிமையான பாடல்களை கொடுத்த வித்வான். எந்த ஒரு மன நிலைக்கும் ஏற்ற வகையில் படல்களின் மூலம் மனதை இசையால் சாந்தப்படுத்த கூடிய வித்தகர். 


 



இசைஞானியின் பிறந்தநாள் நாள் ரகசியம் :


பல முறை சொல்லப்பட்ட தகவல் என்றாலும் அறியாத சிலருக்காக ஒரு துருப்பு செய்தி. உண்மையிலேயே இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி தான். அதே நாள் தான் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இளையராஜாவிற்கு இசைஞானி என்ற பட்டத்தை கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. அவர் மீது இருந்த மதிப்பும் மரியாதையால் தனது பிறந்தநாளை ஜூன் 2ம் தேதி கொண்டாடி வருகிறார் இளையராஜா. கலைஞர் ஐயா தமிழுக்கு ஏராளமான சேவைகளை செய்துள்ளார். அந்த அளவுக்கு நான் ஒன்றும் செய்து விடவில்லை. அதனால் கலைஞரை மட்டுமே தமிழக மக்கள் ஜூன் 3ம் தேதி வாழ்த்த வேண்டும். அதனால் தான் அவர் இந்த முடிவை எடுத்ததாக பலமுறை தெரிவித்துள்ளார்.   


காலதாமதம் என்றாலும் சிக்ஸர் தான் :


எந்த துறையானாலும் அதில் பிரமிக்கவைக்கும் சாதனைகளை செய்தவர்களில் பெரும்பாலானோர் இளம் வயதில் அடியெடுத்து வைத்தவராக இருப்பார்கள். ஆனால் இளையராஜாவின் முதல் படமான 'அன்னக்கிளி' படத்தில் அவர் இசையமைப்பாளராக அறிமுகமாகும் போது அவரின் வயது 32. தாமதமாக பயணத்தை தொடங்கி இருந்தாலும் ஐந்து ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து தமிழ் ரசிகர்களை மயக்கிய ஒரு முடிசூடா மன்னராக கொண்டாடப்பட்டார். 


 



கலை பணி மீது சிநேகம் :


பின்னணி இசையை கற்றுக்கொள்ளத் தொடங்கியதில் இருந்து அவருக்கு முன் சாதனை படைத்தவர்களின் படைப்புத் திறமையை பற்றி அறிந்து கொள்வதும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களின் இசையை தொடர்ந்து கேட்டு பயிற்சி எடுக்கவும் சற்றும் தளராதவர். இசை துறையில் அடைந்த விருதுகள் மற்றும் வெற்றியை விடவும் தனது கலை பணியை எந்த அளவுக்கு நேசிக்கிறார், மதிக்கிறார் என்பதை பொறுத்ததே. அப்படி தன்னுடைய வாழ்க்கையின் பெரும் பகுதியை இசைக்காக அர்ப்பணித்தவர் இளையராஜா. 


இன்றும் பிஸியாக இருக்கும் மேதை :


திரைத்துறையில் இத்தனை ஆண்டுகாலமாக பயணிப்பது என்பது பலரும் நிகழ்த்தியது தான் என்றாலும் இன்றும் அவர் பிஸியாக படங்களுக்கு இசையமைக்கிறார் என்பது தான் ஆச்சரியமான  விஷயம். அவரின் வெற்றிக்கு காரணம் இன்றும் அவரிடம் இருக்கும்  கற்கும் ஆர்வம். காலமாற்றத்துக்கும் புதிய முன்னேற்றங்களுக்கும் வரவேற்பு கொடுத்து அதற்கு ஏற்றபடி தன்னை செதுக்கி தனது இயல்பையும் விட்டுக்கொடுக்காமல் தொலைக்காமல் இருக்க இளையராஜா போன்ற சாதனையாளர்களால் மட்டுமே முடியும். இந்த இசை மேதையின் 80வது பிறந்தநாள் இன்று !