புள்ளம்பாடியில் மனக்காடு பகுதி தெற்குத்தெருவில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன்(வயது 48). இவரது தம்பி முருகேசன்(44). இவர்கள் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பாலகிருஷ்ணன் தனது மகளை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்காக தனது மனைவி, மகன் ஆகியோருடன் வெளியூருக்கு சென்று விட்டார். முருகேசன் ேநற்று காலை தங்களுக்கு சொந்தமான கடைக்கு வந்து விட்டு, பின்னர் மதியம் 1 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது அவரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது பற்றி உடனடியாக தனது அண்ணனுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து பாலகிருஷ்ணன் தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவரது வீட்டு கதவின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது 2 பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தன. இதில் பாலகிருஷ்ணன் வீட்டில் இருந்த பீரோவில் இருந்து தங்கச்சங்கிலிகள், தோடு, மோதிரம் உள்ளிட்ட 10 பவுன் நகையும், ரூ.17 ஆயிரமும் திருட்டு போயிருந்தது. முருகேசன் வீட்டில் பீரோவில் இருந்த 2¼ பவுன் நகை காணாமல் போயிருந்தது.




மேலும் இது குறித்து கல்லக்குடி போலீஸ் நிலையத்தில் பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத், லால்குடி துணை சூப்பிரண்டு அஜய் தங்கத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் துணை சூப்பிரண்டு மற்றும் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) கார்த்திகாயினி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து மோப்பநாய் லில்லி வர அழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் தனிப்படை அமைத்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண