’தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸ் மூலம் தனது நடிப்புத் திறமையை நிரூபித்து, பல்வேறு தரப்பினரிடையே பாராட்டையும் வரவேற்பையும் பெற்றார் சமந்தா. புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜூனுடன் அவர் தோன்றி நடித்த பாடலான ஊ அண்ட்டாவா இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பெரும் அளவில் வைரலானது. இப்போது, ​​'யசோதா' என்ற மற்றொரு சுவாரஸ்யமான படத்துக்கு சமந்தா தயாராகி வருகிறார். ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகவுள்ளது என அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.


தயாரிப்பாளர் சிவலிங்க கிருஷ்ண பிரசாத் பேசுகையில், "நடிப்பில் மட்டுமின்றி யசோதா படத்தின் சண்டைக்காட்சிகளிலும் சமந்தா அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட உள்ளோம். 12ம் தேதி படப்பிடிப்பு மே மாத இறுதிக்குள் முடிவடையும். இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் தேசிய அளவில் பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு அழைத்துவரக் கூடிய கதையம்சம் கொண்டது. சமீபத்தில் ஒரு பிரமாண்ட செட்டில் படத்தின் ஒரு முக்கிய ஷெட்யூலை முடித்து, இன்று கொடைக்கானலில் மற்றொரு  ஷூட்டிங் ஷெட்யூலுக்கு செல்கிறோம்"  என்றார்.






யசோதா திரைப்படத்தில் சமந்தா தவிர வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதுதவிர சமந்தா நடிப்பில் சாகுந்தலம் என்கிற வரலாற்றுத் திரைப்படமும் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.