சம்பவம் 1: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே பொன்விளைந்த களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவிகள் சிலர், அரசுப் பேருந்தில் சீருடையுடன் இருந்தவாறு மது குடிப்பது போன்ற வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. 


சம்பவம் 2: சென்னை பாரிமுனையில் இருந்து கொரட்டூரை நோக்கிச் சென்ற பேருந்தில் ஏறிய அரசுப்பள்ளி மாணவர்கள் சிலர், பாட்டுப் பாடி நடனமாடினர். படிக்கட்டுகளில் நின்றுகொண்டு, பேருந்தின் கூரையில் ஏறியதால், ஓட்டுநர் கண்டித்தார். இதையடுத்து மாணவர்கள் அவரை சரமாரியாகத் தாக்கினர். 


சம்பவம் 3: தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவர் வகுப்பறையில் ஆசிரியரிடம் ஒழுங்கீனமாக நடந்ததால் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர் குடிபோதையில், ஆசிரியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். 


சம்பவம் 4: விழுப்புரம் அருகே திண்டிவனம் அடுத்த வேப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் ஒருவர், துடைப்பத்தால் சக மாணவர்களைத் தாக்கினார். இந்த சம்பவமும் பேசுபொருளானது.


இவைதவிர திருச்செங்கோட்டில் மாணவர்கள் வகுப்பறைகளில் மது அருந்தியதும், கரூர், மணப்பாறையில் மாணவர்கள் கடுமையான போதையில் சீருடையிலேயே சாலையில் மயங்கிக் கிடந்ததும் அண்மைக் காலத்தில் நடந்த துயர்மிகு சம்பவங்கள்.


மனிதநேயமுள்ள ஒருவரால், இவற்றையெல்லாம் அன்றாட செய்திகளில் ஒன்றாகக் கடந்துவிட முடியாது. இது மாணவ சமுதாயத்தின் பிரச்சினையா? இளைய தலைமுறை செல்லும் பாதை தவறானதா? அதைச் சீரமைக்க வேண்டிய பொறுப்பைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் சமூகமும் தட்டிக் கழிக்கிறோமா? 


இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி 'ஏபிபி நாடு'விடம் பேசினார். 


''கொரோனா காலகட்டத்தில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான உரையாடல், பெரும்பாலும் இல்லாமலேயே போய்விட்டது. பதின்வயதுச் சிறுவன், இளைஞர்களுடனேயே வளர்கிறான். அவர்கள் செய்வதைப் பார்த்து தானும் முயற்சிக்கிறான். 


பாடத்திட்டத்தை முடிக்க வேண்டும், தரவு மேலாண்மையைத் திறம்பட செய்ய வேண்டும் என்ற அழுத்தம் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படுகிறது. இதனால் இயல்பாகவே ஆசிரியர்கள், உயர் அதிகாரிகள் சொல்லும் வேலையை முடிக்கத்தான் முன்னுரிமை அளிக்கிறார்கள். அதைத்தாண்டி மாணவர்களிடம் பொறுமையாகப் பேச நேரமில்லை. பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறைகளும் இருக்கின்றன. 


மாறும் ஆசிரியர்கள் கலாச்சாரம்


இதைத்தாண்டி ஆசிரியர்களின் கலாச்சாரமும் மாறி வருகிறது. அவர்களின் பிரச்சினைகளைப் பெரிதாகப் பேசுபவர்கள், மாணவர்களின் சிக்கல்களைக் கவனிக்க மறுக்கின்றனர். திட்டக்கூடாது, அடிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள் என்பதையே ஆசிரியர்கள் குறையாகச் சொல்லி வருகிறார்கள். அதையும்தாண்டி சில ஆசிரியர்கள் மாணவர்களைக் கண்டிக்கும்போது சர்ச்சையாகிறது. அதனால் ஆசிரியர்களின் பணிக்கே ஆபத்து ஏற்படுகிறது. இதைப் பார்த்து சில ஆசிரியர்கள் அச்சமுறுகின்றனர். நம்முடைய வேலையைப் பார்த்துவிட்டுப் போய்விடலாம் என்ற எண்ணத்துக்குத் தள்ளப்படுகின்றனர். 



பெற்றோர்கள் வேலை, ஊதியம், தேவைகளுக்கான திட்டமிடல் என்று செல்ல, ஆசிரியர்கள் பாடத்திட்டம், ஆவணங்கள் கையாளுகையில் நேரத்தைச் செலவிடுகின்றனர். இடையில் சமுதாயம் குழந்தைகளுக்கு சினிமாவையும் சமூக வலைதளங்களையும் கற்றுக்கொடுக்கிறது. ஆணைகள் பிறப்பித்தால் மாற்றங்கள் நிகழ்ந்துவிடும் என்று கல்வித் துறை நினைக்கிறது. அடிப்படையில் இதுதான் பிரச்சனை.


கொரோனா காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு அதிகரித்தது. இப்போதெல்லாம் வீதிக்கு வீதி மது அருந்துவது, சிகரெட் புகைப்பது, சண்டை போடுவதை நம்மால் சர்வசாதாரணமாகக் காண முடிகிறது. கடந்த காலங்களில் இவையனைத்தும் மறைவாக நடந்தன. இலைமறைகாயாகக் குடும்பத்தினரும் ஒழுக்கம் குறித்துப் பேசினர். இன்று எதுவுமே தவறில்லை என்ற சூழல் நிலவுகிறது. அரசே மதுக்கடைகளை நடத்துகிறது. பள்ளிக்கு அருகில் இருக்கும் பெட்டிக்கடைகளே மாணவர்கள் புகைக்கப் பழக்குகின்றன. 


மாறிய மக்கள் மனநிலை


மக்களின் மனநிலையும் மாறிவிட்டது. முன்பெல்லாம் பொது இடங்களில் மாணவர்கள் ஒழுங்கீனமாகச் செயல்பட்டால், மக்களே நேரடியாக அவர்களைக் கண்டிப்பர். குறைந்தபட்சம் மாணவர்களின் பள்ளிக்கு, குடும்பத்தினருக்கு தகவலைச் சொல்வர். ஆனால் இன்று, ஒரு மாணவன் தவறு செய்தால் அதை வேடிக்கை பார்க்கவும் வீடியோ எடுக்கவுமே ஆட்கள் இருக்கின்றனர்'' என்கிறார் ஆசிரியர் உமா மகேஸ்வரி.


இதற்கிடையே குழந்தைகளும் வன்முறையாளர்கள் ஆகிவருவதாகக் கூறுகிறார் குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளரும் 'தோழமை' அமைப்பின் இயக்குநருமான தேவநேயன்.


வன்முறையாளராகும் குழந்தைகள்


''குழந்தைகளும் வன்முறையாளர்கள் ஆகிவருகிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்திருக்கின்றன. குழந்தைகள் செய்யும் வன்முறைகளும் அதிகரித்திருக்கின்றன. அதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தேசிய குற்றவியல் ஆய்வு நிறுவனத்தின் 2020 ஆய்வறிக்கையும் அதைத்தான் சொல்கிறது. 


கொரோனா காலத்தில் நாடடங்கி, ஊரடங்கி, வீடடங்கி இருந்தாலும் வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன. இதற்கு ஒன்றை மட்டுமே காரணம் சொல்லிக் கடந்துவிட முடியாது. இதில், சமூக வலைதளங்கள், திரைப்படங்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகம் என்று கூட்டுப் பங்களிப்பு உள்ளது. முன்பிருந்தே இத்தகைய செயல்கள் ஆங்காங்கே நடந்து வந்தாலும், சமூக வலைதளக் காலத்தில் அதிகரித்திருக்கிறது. நடக்கும் சம்பவங்கள் அதிகம் வெளியே தெரியவும் ஆரம்பித்திருக்கிறது. 




பருவம், உடல்நிலை மாற்றங்களால் வளரிளம் பருவத்தில் குழந்தைகளுக்கு இயல்பாகவே ஈகோ இருப்பதை உணரலாம். தனக்கென ஒரு பிம்பத்தைத் தாங்களாகவே கட்டமைத்துக் கொள்கின்றனர். தனக்கு யார் ரோல் மாடல் என்பதைப் பெரும்பாலும் தவறாகவே தேர்ந்தெடுக்கின்றனர்.


என்ன காரணம்?


குழந்தைகளுக்கு Mentoring எனப்படும் வழிகாட்டல் குறைந்திருக்கிறது. எது சரி, தவறு என்று பெற்றோரும் ஆசிரியர்களும் வெளிப்படையாகக் குழந்தைகளிடம் பேசுவதில்லை. குழந்தைகளை 'அது படி', 'இது படி' என்று இயக்குபவர்களாகவோ, 'அதைச் செய்யாதே', 'இதைச் செய்யாதே' என்று கட்டுப்படுத்துபவர்களாகவோதான் இருக்கிறோம். குழந்தைகளுக்கு எது தேவை என்பதை, அவர்களுக்கு உகந்த மொழியில் சொல்வதுதான், குழந்தைகளின் நலனுக்கு ஏற்றது. 


உங்கள் குழந்தையாக இருந்தால் செய்வீர்களா? 


அண்மைக் காலங்களில் மாணவர்களும் மாணவிகளும் செய்யும் செயல்களை வீடியோ எடுத்துப் பரப்புவோரிடம் ஒன்றைக் கேட்கிறேன். உங்கள் குழந்தையாக இருந்தால் இவ்வாறு செய்வீர்களா? குழந்தைகள் தொலைதூரக் கல்வி மூலமா கெட்ட வார்த்தைகளைக் கற்றுக் கொள்கின்றனர்? அவர்கள் கேட்ட வார்த்தைகளைத்தான் பேசுகின்றனர். 


திரைப்படங்களில் பேருந்துப் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு செல்பவரை ஹீரோ என்று கொண்டாடுகிறோம். பார்ட்டி என்றால் பீர் பாட்டிலைக் கையில் எடுக்கும் காட்சிக்குக் கைதட்டி ரசிக்கிறோம். அதைச் செய்பவர்தான் ஆண்மகன் என்கிறோம். இதையே நிஜ வாழ்க்கைக்கும் குழந்தைகள் எடுத்துச் செல்கின்றனர்'' என்கிறார் தேவநேயன். 


எதிர்பார்ப்பால் எழும் பிரச்சினைகள்


இதை உளவியல் கோணத்தில் அணுகும் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினரும் உளவியல் மருத்துவ நிபுணருமான சரண்யா ஜெயக்குமார், அதீத எதிர்பார்ப்பால் எழும் பிரச்சினைகளே இவை என்கிறார். 


''இன்றைய இளம் தலைமுறையிடம் நிறைய எதிர்பார்ப்புகளை வைக்கிறோம். அவர்களும் நிறைய எதிர்பார்ப்புகளை சுமந்து கொண்டிருக்கின்றனர். கடின உழைப்பு, திறமை இல்லாமல் விரைவில் வெற்றியாளராக வேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டும், புகழ்பெற்ற பிரபலமாக வேண்டும் என்று நினைக்கின்றனர். 


டீனேஜ் மாணவர்கள், திரைப் பிரபலங்களுடன் செலவிடும் நேரம் கணிசமாக அதிகரித்திருக்கிறது. அதாவது சமூக வலைதளங்களில் பிரபலங்கள் என்ன செய்கிறார்கள் என்று தொடர்ச்சியாகப் பின்தொடர்வது உயர்ந்து வருகிறது. இதனால் நிஜ மனிதர்கள், உறவுகள், நண்பர்களுடன் நேரம் செலவிடுவது குறைந்துவிட்டது


இத்தகைய மாணவர்களுக்கு எல்லாமே கேளிக்கையான அம்சங்களாக மாறிவருகின்றன. எதைச் செய்தாலும் அதில் மகிழ்ச்சியும் பொழுதுபோக்கும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அது நல்லதா, கெட்டதா என்றெல்லாம் கவலைப்படுவதில்லை. 




தானாகவே தவறு செய்யாத குழந்தைகள்


நான் பார்த்தவரை எந்த ஒரு குழந்தையும் தானாகவே தவறு செய்வதில்லை. அதற்குப் பின்னால் ஒரு வயது வந்த நபர் (Adult) கண்டிப்பாக இருப்பார். அவர், அந்தக் குழந்தையை சரியாக வளர்க்காத, கவனிக்காத, தவறாக வழிகாட்டுகிற நபராக இருப்பார். சாதி, மதம் குறித்துப் பெருமிதம் பேசும் குழந்தைகளையும் பார்த்திருக்கிறேன். அதற்குப் பின்னால் பெரும்பாலும் குடும்பம்தான் இருக்கும்.


குற்ற உணர்ச்சியே இருக்காது


இத்தகைய குழந்தைகளில் பெரும்பாலானோருக்குப் படிப்பில் ஆர்வம் இருக்காது. வாழ்க்கையில் எந்தக் குறிக்கோளும் இருக்காது. எந்தத் தவறு செய்தாலும் குற்றம் செய்துவிட்டதாக வருந்த மாட்டார்கள். கல்வி மட்டுமே பாடம் கிடையாது. தவறு செய்து, ஆசிரியர்களிடம் திட்டு வாங்குவதும் ஒரு பாடம். சரியான நேரத்தில் பள்ளிக்குச் செல்வது, தவறு செய்தால் மன்னித்துவிடுங்கள் என்று உளமாரச் சொல்வது, தன்னைத்தானே திருத்திக் கொள்வது ஆகியவையும் பாடங்கள்தான். 


கொரோனா காலத்தில் பள்ளிக்குச் செல்லாததால், இந்தப் பிரச்சினை இன்னும் அதிகரித்தது. குறைந்தது 8 மணிநேரம் அவர்களின் கையில் செல்போன் இருந்தது. அவர்கள் எதைப் பார்த்தார்கள், படித்தார்கள் என்பது யாருக்கும் தெரியும்? இந்தக் குழந்தைகள் பலர், தேவையில்லாத, வண்ணமயமான, இரைச்சல்மிகுந்த உள்ளடக்கங்களையே பார்த்ததாக ஆய்வு சொல்கிறது. 




அறிவியல்படி மூளை முழுமையாக வளர்ச்சி அடையாதபோது (frontal cortex), வெளிப்புற கவனச் சிதறல்கள் அதிகரிப்பதால், குழந்தைகளின் முடிவெடுக்கும் திறன் தவறாகத்தான் இருக்கும். அவர்கள் பேசும் வார்த்தைகள் தவறாக இருக்கும். அர்த்தம் புரிந்து யாரும் கெட்ட வார்த்தைகளைப் பேசுவதில்லை. 'எனக்குக் கோபம் வரும்போது உடனடியாகச் சில வார்த்தைகளை (fillers) பேசிவிடுவேன். அதற்கான அர்த்தங்களை எல்லாம் அறிந்துகொள்ள மாட்டேன்' என்பதுதான் நடைமுறையில் நடக்கிறது. இவர்கள் படிப்பில் ஆர்வத்தை இழந்து, இடைநிற்றல் நிலைக்குச் செல்கின்றனர். 


கண்களில் பார்ப்பதை எல்லாம் முயற்சித்துப் பார்ப்பேன் என்பது விடலைகளுக்கு மட்டுமல்ல இளைஞர்களுக்குமான குணமாக உள்ளது. இந்த சூழலில், திரைப்படங்கள் அவற்றைத் தூபம் காட்டி வளர்க்கின்றன'' என்கிறார் உளவியல் மருத்துவர் சரண்யா ஜெயக்குமார். 


இவை அனைத்தையும் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்று விரிவாகப் பேசுகிறார் ஆசிரியர் உமா மகேஸ்வரி.


''ஆசிரியர்கள் பள்ளிகளில் நேர்மறை ஆராய்ச்சி மனப்பான்மையோடு, மாணவர்களிடம் உரையாட வேண்டும். குழந்தைகளிடம் ஆசிரியர்கள் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாலே, பெரும்பாலான தவறுகள் நடக்காது. அதையும்மீறித் தவறு செய்யும் மாணவனைத் தட்டிக் கேட்க வேண்டும். அற உணர்வோடு ஆசிரியர்களால் செய்யப்படும் செயலுக்கு எதிராக கல்வித்துறை நடவடிக்கை எடுக்காது என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். அந்த உறுதி இல்லாததால்தான், நமக்கு எதற்கு வம்பு என்று ஆசிரியர்கள் தங்களின் எல்லையைச் சுருக்கிக் கொள்கின்றனர். 




குடிப் பழக்கமும் திரைப் பயன்பாடும்


முன்பெல்லாம் 10 குடும்பங்களில் ஓரிரு குடும்பங்களில் மட்டுமே குடிப்பழக்கம் இருக்கும். இன்று ஓரிரு குடும்பங்களில்தான் அந்தப் பழக்கம் இருப்பதில்லை. போதாதற்கு டிக் டாக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், ஷேர் சாட், பப்ஜி என குழந்தைகளுக்கு வேறோர் உலகம் திறந்திருக்கிறது. குழந்தைகள் இவற்றைப் பார்த்து வளரும்போது, எது சரி, எது தவறு என்று குழம்புகிறார்கள். அவர்களுக்குப் பிடித்ததைச் சரி என்று ஏற்றுக்கொண்டு, அந்த வழியிலேயே நடக்கிறார்கள். 


பொதுவாக ஒவ்வொரு வகுப்பிலும் 40 சதவீதக் குழந்தைகள் சரியான முறையில், நன்றாகப் படிப்பவர்களாக இருக்கிறார்கள். மீதமுள்ள 60% பேர், வெவ்வேறு பிரச்சினைகளைத் தாண்டித்தான் பள்ளிக்கே வருகிறார்கள். அவர்களின் தேவைகளுக்குக் காதுகொடுக்க வேண்டியது அவசியமான ஒன்று. ஆசிரியர்கள் நினைத்தால் இத்தகைய சம்பவங்களை நிச்சயம் குறைக்க முடியும். 


யாருக்குப் பொறுப்பு?


பள்ளி வளாகத்தை விட்டு வெளியே சென்றால் மாணவர்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்பதுதான் பெரும்பாலான பள்ளிகளின் நிலையாக உள்ளது. பொது இடங்களில் பள்ளி நேரங்களிலேயே  சீருடையுடன் மாணவ - மாணவிகள் செல்வதை நீங்கள் பார்த்திருக்கலாம். காவல் துறையினர் காவலில் இருந்தாலும் அவர்களைக் கண்டுகொள்வதில்லை. பொதுமக்களும் மாணவர்களைச் சலனமின்றிக் கடந்து செல்கின்றனர். 


அதனால் ஒவ்வொருவருக்குமே மாணவர்களை மாற்றி அமைக்கும் பொறுப்பு உண்டு. இதை அனைத்துத் தரப்பினரும் உணர்ந்து, சரியான வகையில் தங்களின் கடமைகளைச் செய்ய முன்வர வேண்டும். படிப்பு, தேர்வுகள் தாண்டி நடத்தை மாற்றங்களைச் சரிசெய்வதும் கல்வியின் முக்கிய அங்கம் என்பதை பள்ளிக் கல்வித்துறை உணர்ந்து செயல்பட வேண்டும்'' என்கிறார் ஆசிரியர் உமா மகேஸ்வரி. 




அதிகாரிகளைப் பயன்படுத்துங்கள்


சட்டங்கள் குறித்த விழிப்புணர்வும் வழிகாட்டுதலும் பரவலாக்கப்பட வேண்டும் என்கிறார் உளவியல் மருத்துவர் சரண்யா ஜெயக்குமார். ''அனைத்து மாவட்டங்களிலும், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு என்ற அமைப்பும் குழந்தைகள் நலன் குழுவும் செயல்படுகிறது. இவை தவிர 24 மணிநேரமும் 1098 என்ற இலவச எண் செயல்பட்டு வருகிறது. அதேபோல குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கையாளத் தனிப்பிரிவு உள்ளது. இதற்குக் கீழ்தான் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் வரும். 


ஒவ்வொரு காவல் நிலையத்திலும் குழந்தைகள் நலன் சார்ந்த அதிகாரி உள்ளார். இவர்கள் அனைவரும் இருக்கிறார்களே ஒழிய, இவர்களை நாம் பயன்படுத்திக் கொள்வதில்லை. அதை மக்கள் சரியாகச் செய்ய வேண்டும். சட்டங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு குழந்தையிடம் தேவையில்லாத காணொலிகளைக் காட்டுவதும் போக்ஸோ சட்டத்தின்படி குற்றம். இது எத்தனை பேருக்குத் தெரியும்? சட்டங்கள் குறித்த விழிப்புணர்வும் வழிகாட்டுதலும் பரவலாக்கப்பட வேண்டும்'' என்று சரண்யா கேள்வி எழுப்புகிறார். 


ஆங்காங்கே நடக்கும் சில சம்பவங்களை வைத்து, அத்தகைய குழந்தைகள் அனைவரும் குற்றவாளிகள் என்று முடிவுக்கு வரக்கூடாது என்கிறார் தேவநேயன்.


''18 வயதுக்குக் கீழுள்ள அனைவருமே குழந்தைகள்தான். அவர்கள் திருடர்களோ, குற்றவாளிகளோ அல்ல. சட்டத்துக்கு முரணான செயல்களைச் செய்ததாகக் கருதப்படும் குழந்தைகள் என்றே அவர்களை அழைக்கவேண்டும் என்கிறது அரசு. குழந்தைகள் குற்றவாளிகள் அல்ல. அவர்களின் சூழல்தான் குற்றம்செய்யத் தூண்டுகிறது. அவ்வாறு குழந்தைகள் வெளிப்படுத்துவதை, நெறிப்படுத்த நாம் கற்றுக்கொள்ள வேண்டும். 


இத்தகைய சம்பவங்களில் பெரும்பாலானவை அறியாப் பருவத்தில் தெரியாமல் செய்வதுதான். மிகச்சில மட்டுமே திட்டமிட்டதாக இருக்கும். அதற்கும் சம்பந்தப்பட்டவர்களின் புறச்சூழல், குடும்பச் சூழல் ஆகியவை முக்கியக் காரணங்களாக இருக்கும். 




குழந்தைகளை அடித்துச் சரிசெய்யும்போக்கு இல்லாததால்தான் இவ்வாறு நடப்பதாகவும் சிலர் கூறிவருகின்றனர். இந்த மனநிலை மோசமானது. பள்ளியோ, ஆசிரியர்களோ, குடும்பமோ தனித்து எதையும் செய்ய முடியாது. கொரோனா, சமூக வலைதள காலகட்டத்தில் ஆசிரியர்கள் ஆலோசகர்களாகவும் நலம் விரும்பிகளாகவும் மாற வேண்டும். குடும்பத்தினர் மனித மதிப்பீடுகள், வாழ்க்கைத் திறன், அறம்சார் உணர்வு ஆகியவற்றைக் கற்பிக்க வேண்டும். 


கண்ணில் காணும் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் அனைத்தையும் வைரலாக்க எண்ணிப் பகிர்ந்து, குழந்தைகளின் மாண்பைச் சிதைக்கக் கூடாது. அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்துதான் மாணவர்கள் மனதில் மாற்றத்தை விதைக்க முடியும். சரியான குடும்பம், வயதுக்குத் தகுந்த நட்பு இருந்தால்தான், குழந்தையின் வளர்ச்சி முறையாக அமையும்'' என்கிறார் தேவநேயன். 


"100 இளைஞர்களைக் கொடுங்கள், இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன்" என்றார் விவேகானந்தர். இளைஞர்களே இந்தியாவின் சொத்து. அவர்களுக்கு சரியான வழிகாட்டலும், திரைப்படம் உள்ளிட்ட ஊடகங்களில் கட்டுப்பாடும் சமுதாயத்தில் விழிப்புணர்வும் ஏற்பட்டால் மட்டுமே ஏற்றம் பிறக்கும்.