பாலிவுட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான, பலராலும் கொண்டாடப்படுகிற `காஃபி வித் கரண்’ ஷோ மீண்டும் ஒளிபரப்பாகிறது. மிகப் பிரபலமான இந்த டாக் ஷோவின் அடுத்த சீசன் மேலும் பெரிதாகவும், கூடுதல் சிறப்பாகவும் இருக்கும் என அதன் தொகுப்பாளர் கரண் ஜோஹர் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், வரும் ஜூலை 7 முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது `காஃபி வித் கரண்’. பல்வேறு பிரபலங்களின் சுவாரஸ்யமான வாக்குமூலங்கள், வெளிவராத தகவல்கள், சர்ச்சைகள் ஆகியவற்றிற்குப் பஞ்சமில்லாமல் வெளியாகவுள்ளது `காஃபி வித் கரண்’.
சமீபத்தில் `காஃபி வித் கரண் ஏழாவது சீசனின் டீசர் வெளியாகியிருந்த நிலையில் அதில் ரன்வீர் சிங், ஆலியா பட், ஷாஹித் கபூர், சமந்தா, சாரா அலி கான், அக்ஷய் குமார், டைகர் ஷ்ரோஃப், க்ரித்தி சனோன், விஜய் தேவரகொண்டா முதலான பல்வேறு பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இந்நிலையில், தற்போதைய `காஃபி வித் கரண் ஏழாவது சீசனில் என்னென்ன சுவாரஸ்யங்கள் அரங்கேற இருக்கின்றன? இதோ ஒரு பட்டியல்...
1. சமீபத்தில் தான் கருவுற்று இருப்பதை அறிவித்து, இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தார் ஆலியா பட். எனவே அவர் தான் கருவுற்றிருப்பது குறித்தும், ரன்பீர் கபூருடனான தனது அழகான திருமணம் குறித்தும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2. நடிகை சமந்தாவும், நடிகர் அக்ஷய் குமாரும் கலந்துகொண்ட `காஃபி வித் கரண் ஏழாவது சீசனின் ப்ரோமோவில் சமந்தா கரண் ஜோஹரை மணமுறிவுகளுக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார். அதில் அவர், `நீங்கள் வாழ்க்கையை உங்கள் `கபி குஷி கபி கம்’ படத்தைப் போல இருப்பதாகக் காட்டியிருக்கிறீர்கள்.. ஆனால் உண்மையில் அது `கேஜிஎஃப்’ போல இருக்கிறது’ எனக் கூறியிருந்தார்.
3. ஷாஹித் கபூரை சீண்டும் விதமாக கரண் ஜோஹர், `சிங்கிளாக இல்லாமல் இருப்பதால் எதனை மிஸ் செய்கிறீர்கள்?’ எனக் கேட்க, `பெண்களைத் தவிர வேறு எதாவது சொல்ல வேண்டுமா?’ எனப் பதிலளித்திருக்கிறார்.
4. ரன்வீர் சிங் தன்னுடைய `செக்ஸ் ப்ளேலிஸ்ட்’ பட்டியலை வெளியிடவுள்ளார். `ராக்கி ராணி கி ப்ரேம் கஹானி’ திரைப்படத்தில் தன்னுடன் நடித்த நடிகை ஆலியா பட்டுடன் `காஃபி வித் கரண் ஏழாவது சீசனின் கலந்துகொண்டுள்ளார் ரன்வீர் சிங்.
5. மறைந்த நடிகை ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோரின் மகள் ஜான்வி கபூர் தான் எதிர்பார்க்கும் கணவர் குறித்து தனது ஆசைகளைப் பேசியுள்ளார்.
6. கரண் ஜோஹர் நடிகை சாரா அலி கானிடம், `உங்கள் முன்னாள் காதலர் ஏன் உங்கள் முன்னாள் காதலராக இருக்கிறார்?’ எனக் கேட்க, அதற்கு அவர் `ஏனெனில் அவர் அனைவருக்கும் முன்னாள் காதலராக இருந்திருக்கிறார்’ எனப் பதிலளித்திருக்கிறார்.
இத்தனை சுவாரஸ்யங்களுடன் வரும் ஜூலை 7 அன்று ஒளிபரப்பாகிறது `காஃபி வித் கரண்’ ஏழாவது சீசன்.