ஜூலை 11 ஆம் தேதி கண்டிப்பாக அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்காது என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், எம்.எல்.ஏ.வுமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். 


கடந்த கடந்த 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் நீதிபதிகள் கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என்று உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து நடந்த பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலரும் ஒற்றைத் தலைமை வலியுறுத்தி 23 தீர்மானங்களை நிராகரிப்பதாக ஆவேசமாக தெரிவித்தனர். இக்கூட்டத்தில் இருந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பாதியில் வெளியேறினார். 


பொதுக்குழு கூட்டத்திற்கு பின்பாக இருதரப்பும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். இதனிடையே சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 27 ஆம் தேதி நடந்தது. இந்த கூட்டம் தன்னுடைய ஒப்புதலின்றி நடப்பதாக ஓபிஎஸ் கூற, அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கூட்டம் நடந்தது. தொடர்ந்து  எடப்பாடி பழனிசாமி கழக தலைமை நிலையச் செயலாளர் என்ற பெயரில் அறிக்கை வெளியிட தொடங்கியது ஓபிஎஸ் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 




தமிழ்நாட்டில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் அதிமுகவை பொறுத்தவரை வேட்பாளர்களுக்கான ஏ மற்றும் பி படிவத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் கையெழுத்து போட வேண்டும். கையெழுத்து போட நான் தயார் என ஓபிஎஸ் அறிக்கை விட எடப்பாடி பழனிசாமியோ ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளரே இல்லை. கடைசி நாளில் இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்படையுதாக இல்லை என பதிலறிக்கை விட்டு அதிர வைத்தார். இதனிடையே ஜூலை 11 ஆம் தேதி அதிமுகவின் அடுத்த பொதுக்குழுவை கூட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர். 


பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அதிமுக தலைமைக் கழகம் அழைப்பு என்ற பெயரில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அதிமுக பொதுக்குழுவை ஆன்லைனில் நடத்தலாமா எனவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அழைப்பிதழ்  அனுப்பி ஏற்பாடுகள் செய்தாலும் ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடக்க வாய்ப்பில்லை என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், எம்.எல்.ஏ.வுமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். 


மேலும் எடப்பாடி பழனிசாமி சர்வாதிகார மனநிலையோடு செயல்படுவதாகவும், பொருளாளருக்கு தான் சின்னமும், கட்சியை வழிநடத்தும் அதிகாரமும் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதேபோல் பொருளாளர் ஓபிஎஸ் ஒப்புதலின்றி பொதுக்குழுவை கூட்டினால் அது செல்லாது என்றும், தலைமைக் கழகம் அழைப்பு என்ற பெயரில் அழைப்பிதழ் அனுப்புவது சரியல்ல எனவும் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். இதனால் அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண