சமந்தாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு விளக்கம் அளித்து அவரது டிஜிட்டல் மேனஜர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
நேற்றைய தினம் சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு தொடர்பில்லாத புகைப்படம் ஒன்று இடம் பெற்றது.
இந்தப் புகைப்படத்தை பார்த்த சமந்தாவின் ரசிகர்கள் என்னாச்சு.. எதுக்கு இப்ப இந்தப் போட்டோ.. என்று குழம்பி போயினர். மேலும் சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கமானது ஹேக் செய்யப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் இந்த கேள்விகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சமந்தாவின் சோடியல் மீடியாவை நிர்வகிக்கும் அவரது டிஜிட்டல் மேனேஜர் சேஷங்கா பினேஷ் விளக்கம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த விளக்கத்தில், “ சில தொழில் நுட்ப கோளாறு காரணமாக, சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தவறான பதிவு இடம்பெற்றது. அந்தத் தவறு குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம். இது தொடர்பாக ஏதேனும் குழப்பம் ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு கோரிக் கொள்கிறோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, அண்மையில் வெளியான காஃபி வித் கரண் சீசன் 7 ப்ரோமோவில் பங்கேற்றிருந்த சமந்தா பலரது மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வுக்கும் கரண் தான் காரணம் என சாடியிருந்தார். அதில் பேசிய அவர் ”நீங்கள் வாழ்க்கையை உங்கள் `கபி குஷி கபி கம்’ படத்தைப் போல இருப்பதாகக் காட்டியிருக்கிறீர்கள்.. ஆனால் உண்மையில் வாழ்க்கை `கேஜிஎஃப்’ போல இருக்கிறது” என அவர் பேசியிருந்தார்.