இலங்கை நாடாளுமன்றத்திற்கு வந்த அதிபர் கோத்தபய ராஜபக்சவை எதிர்க்கட்சியினர் வெளியே செல்லுமாறு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உலக நாடுகளையே ஆட்டம் காண செய்துள்ளது. அங்கு பெட்ரோல், டீசல், உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதோடு அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் எதிரொலியால் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்ததோடு மட்டுமல்லாமல் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கேவும் பதவியேற்றார். 






ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பது போல அங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இன்னும் ஒருநாள் மட்டுமே எரிபொருள் மீதமிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. முன்னதாக அங்கு எரிபொருள் பிரச்னையை சமாளிக்க இந்தியா 4 முறை பெட்ரோல், டீசல் அனுப்பியிருந்தது. அதேசமயம் அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் நடந்தே பல கிலோமீட்டர் தூரம் சென்று வருகின்றனர். 


இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே விளக்கம் அளித்தார். அப்போது அவரின் உரையை கேட்க அதிபர் கோத்தபய ராஜபக்ச அங்கு வருகைத் தந்தார். ஆனால் எதிர்க்கட்சியினர் கோத்தபய வீட்டுக்கு போ என பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. இதைத் தொடர்ந்து  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்தார். 


இதனிடையே தன்னிடம் பிரதமர் பதவியை வழங்கினால் 6 மாதங்களில் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வருவேன் என எம்.பி. அனுரகுமார திசாநாயக்கவின் கருத்தை வரவேற்ற ரணில் விக்கிரமசிங்கே ஏதேனும் திட்டம் இருப்பின்  அதை அதிபரிடம் சமர்பிக்குமாறும், இதற்காக பிரதமர் பதவியை அனுர குமார திசாநாயக்கவிடம் ஒப்படைக்க தயார் எனவும் அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண