சமந்தா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் குஷி படத்தின் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.


டோலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான விஜய்  தேவரகொண்டா தெலுங்கு சினிமா தாண்டி அனைத்து மொழிகளிலும் கவனமீர்த்து வருகிறார். இந்நிலையில்,  ‘மகாநதி’ படத்துக்குப் பிறகு இரண்டாம் முறையாக விஜய் தேவராகொண்டா நடிகை சமந்தாவுடன் இணைந்துள்ள படம் குஷி.


அர்ஜூன் ரெட்டி,  மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை ஷிவா நிர்வாணா இயக்குகிறார். ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.


 ஜாலியான காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்தது.


சென்ற ஆண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர், ஹைதராபாத் பகுதிகளில் நடைபெற்று வந்தது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் நடிகை சமந்தாவுக்கு காயம் ஏற்பட்டது. மேலும் நாகசைதன்யாவுடனான பிரிவு, மயோசிட்டிஸ் நோய் ஆகியவற்றால் சமந்தா கடும் மன அழுத்தத்துக்கு சென்ற நிலையில் படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப்போனதாகக் கூறப்பட்டது.


மேலும் மற்றொருபுறம் சமந்தா யசோதா, சகுந்தா பட வேலைகளில் பிசியானார்.


ஆனால் நடிகர் விஜய் தேவரகொண்டா லைகர் படத்துக்குப் பிறகு வேறு படங்களில் நடிக்காத நிலையில் இந்தப் படத்தை பெரிதும் எதிர்பார்த்து விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் காத்திருந்தனர்.


இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள குஷி படத்தின் அப்டேட் விஜய் தேவரகொண்டா - சமந்தா ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. 


அதன்படி வரும் செப்டெம்பர் 1ஆம் தேதி குஷி படம் வெளியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் கைக்கோர்த்தபடி இருக்கும் போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது.


சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் இணைந்து மகாநதி படத்தில் துணை கதாபாத்திரங்களாகவும், காதல் ஜோடிகளாகவும் நடித்திருந்த நிலையில், இந்த ஜோடி ஏற்கெனவே ரசிகர்களை ஈர்த்தது.


 






இந்நிலையில், தற்போது இருவரும் இணைந்து ஒரு முழு நீள காதல் படத்தில் நடித்திருப்பது இவர்களது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


சமந்தாவின் நடிப்பில் மற்றொருபுறம் சாகுந்தலம் படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. வரும் ஏப்ரல் 14ஆம் தேதி சாகுந்தலம் படம் திரைக்கு வரும் நிலையில், படக்குழுவினருடன் இணைந்து  ப்ரொமோஷன் பணிகளில் சமந்தா ஈடுபட்டு வருகிறார்.


அதேபோல் பாலிவுட்டில்  நடிகர் வருண் தவானுடன் இணைந்து சிட்டாடல் தொடரிலும்,  அக்‌ஷய் குமாருடன் இணைந்து பெயரிடப்படாத படத்திலும் சமந்தா  நடித்து வருகிறார்.