பச்சை கம்பளம் போர்த்தியிருக்கும் அடர்ந்த வனப்பகுதிகள், சுற்றியெங்கும் சூழ்ந்து நிற்கும் மலைத்தொடர்கள், அடிக்கடி தென்படும் வனவிலங்குகள், எப்போதும் ஒலித்துக் கொண்டேயிருக்கும் யானைகளின் பிளிறல்கள், ஓயாத பறவைகளின் கீச்சொலிகள் என முதுமலை புலிகள் காப்பகம் இயற்கை எழில் கொஞ்ச காட்சியளிக்கும். அங்கு கிராமப்பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டவும், பிடிக்கவும் பயிற்சி பெற்ற கும்கி யானைகள், தாயைப் பிரிந்து பரிதவிக்கும் நிலையில் மீட்கப்படும் குட்டி யானைகள் உள்ளிட்டவை முதுமலை யானைகள் முகாமில் பாரமரிக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய யானைகளை தங்களது குடும்பத்தின் ஒரு உறுப்பினர்களாக கருதி அன்பையும், அக்கறையும் காட்டி பாகன்கள் வளர்த்து வருகின்றனர்.



அவர்களில் காட்டு நாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெல்லி ஆகியோர் யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர். தாயை பிரிந்து உடம்பில் பல காயங்களுடன் இருந்த ஒரு குட்டி யானைக்கு ரகு எனப் பெயரிட்டு பொம்மனும், அவருக்கு துணையாக வரும் பெல்லியும் வளர்த்து வந்தனர். ஆசனூர் வனப்பகுதியில் மிகவும் பலவீனமாக நிலையில் மீட்கப்பட்ட அம்மு என்ற குட்டி யானையை, தாய் யானையுடன் சேர்த்து வைக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தது.. அது உடல் பலவீனமாகவும், வயிறு வீங்கியிருந்த நிலையிலும் இருந்தது. அந்த யானை பசியால் ஜல்லிக்கற்களை சாப்பிட்டு இருந்ததால், பால் குடிக்கவில்லை. இத்தகைய நிலையில் இருந்த அம்மு யானைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு பராமரிப்பிற்காக முதுமலை கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொம்மி என பெயரிடப்பட்ட அந்த யானையை பராமரிக்கும் பொறுப்பு, பொம்மன், பெல்லி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.. பேருயிரான யானைகள் மீது பேரன்பை கொட்டி இருவரும் வளர்த்து வந்தனர். ஒரு கட்டத்தில் பொம்மனும், பெள்ளியும் திருமணம் செய்து கொண்டார்கள்.


பழங்குடிகளின் வாழ்வியலையும், அவர்களுக்கும் யானைகளுக்கும் இருக்கும் உறவையும் மிகவும் உணர்வுப்பூர்வமாக எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம் பதிவு செய்திருந்தது. இந்த படத்தை கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கியிருந்தார். கடந்தாண்டு டிசம்பர் 8 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் சிறந்த ஆவணப்படம் என்ற பிரிவில் ஆஸ்கர் விருதை வென்று அசத்தியது.




ரகு, பொம்மி ஆகிய யானைகள் வளர்ந்து விட்ட நிலையில், அவற்றை பராமரிக்கும் பொறுப்பில் இருந்து பொம்மன், பெல்லி இருவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் ஆஸ்கர் விருது பெற்றதையொட்டி பொம்மி யானையை பார்க்க வந்த பெள்ளி, அந்த யானையை ஆரத்தழுவி கட்டியணைத்து கண்ணீர் விட்டபடி அங்கிருந்து உடனடியாக கிளம்பி சென்றார். சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் பொம்மன், பெல்லி ஆகியோரை வாழ்த்தி பொன்னாடை அணிவித்து, பாராட்டு கேடயமும், தலா ஒரு இலட்ச ரூபாய்க்கான காசோகளை வழங்கினார். இதேபோல யானை பாகன்களுக்கு நிதியுதவி வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின், அவர்களுக்காக குடியிருப்பு கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.


காடுகளுக்குள் போதிய வசதிகள் இல்லாத குடியிருப்புகளில் வாழ்ந்த இருவரும் விமான பயணத்தையும், பெருநகரங்களுக்கு செல்வதையும் கனவில் கூட நினைத்து பார்த்திருக்கவில்லை. ஆஸ்கர் விருது மூலம் பொம்மனும், பெல்லியும் தங்கள் வாழ்நாளில் முதல் முறையாக விமானத்தில் கோவையில் இருந்து சென்னைக்கு சென்றனர். முதலமைச்சரை சந்திக்க நீலகிரி மாவட்டத்தை தாண்டி வேறு எந்தப்பகுதிக்கும் சென்றிடாத பெல்லி சென்னைக்கு முதல் முறையாக பயணித்தார். நெட்பிளிக்ஸ் நிறுவன நிகழ்ச்சிக்காக பெங்களூரு, மும்பை ஆகிய பெருநகரங்களுக்கும் இருவரும் விமானத்தில் சென்றுள்ளனர். பெருநகரங்களை சுற்றி பார்ப்பதோடு, அங்குள்ள ஆடம்பர வசதிகள் கொண்ட நட்சத்திர விடுதிகளில் தங்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. அவர்களுக்கு அசாத்தியங்களாக இருந்தவற்றை பேருயிர் யானைகள் மீது அவர்கள் கொண்டிருந்த பேரன்பு சாத்தியப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் அன்பு பரவட்டும் என ஆஸ்கர் விருதுடன் பொம்மன், பெல்லி புன்னகையுடன் இருக்கும் புகைப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் டிவிட்டரில் வெளியிட்டுள்ளது. ஆம். உலகம் முழுவதும் அன்பு பரவட்டும்.