தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது கையில் இருக்கும் படங்களை மட்டுமே நடித்துக்கொடுக்க முடிவெடுத்துள்ள சமந்தா புதிய படங்களில் ஏதும் கமிட்டாகிவில்லை. அவர் சிறிது காலம் ஓய்வெடுத்து பிறகு மீண்டும் படங்களில் நடிப்பார் என சமந்தாவிற்கு நெருக்கமானவர்கள் தெரிவித்திருந்தனர். தற்போது சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கிறார் சமந்தா. ஹாயாக அமர்ந்து படங்கள் பார்ப்பது, நாய் குட்டிகளை வாங்கி வளர்ப்பது, மாடலிங் செய்வது என தனக்கு பிடித்த விஷயங்களை செய்து, அதனை தனது ரசிகர்களுடனும் பகிர்ந்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க சமந்தா தனது கணவருடன் விவாகரத்து செய்ய இருப்பதாக சமீப காலமாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. இது குறித்து சமந்தா தரப்பிலோ அல்லது அவரது கணவர் நாக சைத்தன்யா தரப்பிலோ மறுப்பு தெரிவிக்கவும் இல்லை.
கடந்த 2017ம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணமான பிறகு சமந்தா நடிப்பாரா என்று கேள்வி எழுந்தபோது, அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து அந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார். திருமணத்திற்கு பிறகு சமூக வலைதளங்களில் சமந்தா தனது பெயரை, தனது கணவரின் குடும்ப பெயரான அக்கினேனியை இணைத்து சமந்தா அக்கினேனி என்று வைத்திருந்தார். இந்த நிலையில், நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்கினேனி என்ற பெயரை நீக்கிவிட்டும் மீண்டும் சமந்தா ருத்பிரபு என மாற்றியுள்ளார். முன்னதாக ட்விட்டர் பக்கத்தில் தனது பெயரை சமூக வலைதளங்களில் எஸ் என்று மாற்றினார். அப்போது தெலுங்கில் சகுந்தலம் என்ற இதிகாசப் படத்தில் நடிப்பதால் சமூக வலைதளங்களில் தனது பெயரை எஸ் என்று மாற்றியதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமிலும் பெயரை மாற்றியிருப்பது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருகிற 24 ஆம் தேதி நாக சைத்தன்யா, சாய் பல்லவி நடிப்பில் வெளியாகவுள்ள ‘லவ் ஸ்டோரி’ என்னும் படத்தின் புரமோஷன் வேலைகளில் கலந்துக்கொள்வதற்காக நேர்காணல் ஒன்றில் நாக சைத்தன்யா பங்கேற்றுள்ளார். அப்போது நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், சமந்தா குறித்து கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளனர். . ஆனால் நாக சைத்தன்யா சமந்தா குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டு “நான் இங்கே படத்தின் புரமோஷனுக்காக வந்துள்ளேன், என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்வி கேட்காதீங்க” என காட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் சமந்தா மற்றும் நாக சைத்தன்யா இருவருக்கும் இடையில் விரிசல் இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என நெட்டிசன்கள் கிசு கிசுத்து வருகின்றனர்.
ஆனாலும் சமந்தா லவ் ஸ்டோரி படத்திற்காக நாக சைத்தன்யாவை வாழ்த்தியுள்ளார். அதற்கு “நன்றி சாம்” என சமந்தாவிற்கு பதில் கொடுத்துள்ளார் சைத்தன்யா. எது எப்படியோ வெளிப்படையான ஒரு அறிவிப்பை யாரேனும் ஒருவர் வெளியிடும் வரையில் விவாகரத்து விவகாரம் தொடர்கதையாகிப்போகும் என்பதில் சந்தேகமே இல்லை