தென்காசி மாவட்டம் தமிழ்நாடு கேரள எல்லை பகுதியான புளியரையைச் சேர்ந்தவர், கண்ணன் என்பவரது மகன் சதாசிவம் (19). இதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் சுரேஷ் குமார் (24). இவர்கள் இருவரும் இன்று தங்களது இரு சக்கர வாகனத்தில் புளியரையில் இருந்து செங்கோட்டை நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அப்போது மேல கடையநல்லூரைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவரது மகன் நாகலிங்கம் (19) என்பவரும் மற்றும் காளி பாண்டியன் என்பவரது மகன் கார்த்திக் (26) என்பவரும் வேறு ஒரு இரு சக்கர வாகனத்தில் மேல கடையநல்லூரில் இருந்து புளியரை நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது கட்டளை குடியிருப்பு பகுதியில் இவர்கள் நால்வரும் சென்ற இரண்டு இரு சக்கர வாகனங்களும் எதிர் பாரா விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகின. இதில் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சதா சிவம், சுரேஷ் குமார், நாகலிங்கம் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கண்ட அக்கம்பக்கத்தினரும் சாலையில் சென்றவர்களும் புளியரை காவல்துறையினர் மற்றும் அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த புளியரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து உயிரிழந்து சதா சிவம், சுரேஷ் குமார், நாக லிங்கம் ஆகிய மூவரின் பிரேதங்களையும் மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயங்களுடன் சாலையில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த கார்த்திக் தென்காசி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து சம்பவம் குறித்து புளியரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களும் தலையில் தலை கவசம் அணியவில்லை என்பது தான் இந்த துயர சம்பவத்திற்கு காரணம் என விபத்து நடை பெற்ற பகுதிக்கு அருகில் உள்ளவர்கள் கூறுகின்றனர். அது மட்டுமின்றி இந்திய அளவில் அரங்கேறும் இரு சக்கர வாகன விபத்துகளில் உயிரிழக்க கூடிய 100 சதவீத வாகன ஓட்டிகளில் 60 சதவீதம் பேர் இரு சக்கர வாகனத்தில் தலை கவசம் இன்றி பயனித்ததால் தான் உயிரிழந்ததாக கருத்து கணிப்புகள் கிடைத்துள்ளன.
6000 ரூபாய் அலைபேசிக்கு 500 ரூபாய்க்கு உறை போட்டு பயன்படுத்தும் நாம் நம் உயிரின் மதிப்பு அறிந்து இரு சக்கர வாகனம் ஓட்டும் போது தலை கவசம் அணிய மறுப்பது ஏனோ...? தலை கவசம், நம் உயிர் கவசம்