உலகின் வன வளங்கள் மிகுந்த இடங்களில் ஒன்றான மேற்கு தொடர்ச்சி மலையானது இமயமலையை விட பழைமையானது. இந்த மலை தொடர் வடக்கு திலையில் குஜராத்தில் தொடங்கி தெற்கு திசையில் கன்னியாகுமாரி வரை நீண்டு செல்கிறது. தென்காசி மாவட்டத்தில் வடகரை, மேக்கரை, பண்மொழி, மற்றும் கட்டளை குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வாழும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இதில் மேக்கரையில் அமைந்துள்ள அடவி நயினார் கோவில் நீர் தேக்கம் இங்குள்ள சுற்று வட்டாரப் பகுதியின் நீர் ஆதாரமாக உள்ளது.
இந்த அணையின் நீரானது பெரும்பாலும் குடிநீர் தேவைக்கும், விவசாயத்திற்கு தேவையான நீர் பாசனத்திற்கும் பயன்படுகிறது. இங்கு நிலவும் தட்ப வெப்ப நிலையில் நெல், வாழை, பலா ,தென்னை போன்ற பயிர்கள் நன்கு விளையும். மனிதர்களுக்கு மட்டும் அல்லாது மேற்கு தொடர்ச்சி மலையானது பல தரபட்ட பறவைகள் மற்றும் வன விலங்குகளுக்கும் வாழ்விடமாக விளங்குகிறது. இந்த மலை பகுதியில் யானைகள், காட்டு எருமைகள்,காட்டு பன்றி போன்ற நூற்றுக்கு மேற்பட்ட பாலூட்டி விலங்கினங்கள் காணப்படுகிறது.
யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி போன்ற வன விலங்குகள் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் வனப்பகுதியை விட்டு வெளியில் வந்து அருகில் இருக்கும் விளை நிலங்களுக்குள் புகுந்து ஆயிரக்கணக்கான தென்னை, வாழை போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு 4 காட்டு யானைகள் அடவி நயினார் நீர் தேக்கம் அருகே மேட்டுகால் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளது. அடவி நயினார் அணைக்கு செல்லும் பிரதான சாலையின் கீழ் புறம் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து அங்குள்ள மரங்களை சேதப்படுத்தியுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்ந்து பயிர்கள் மற்றும் விளை நிலங்கள் வன விலங்குகளால் சூறையாடப்படுவதால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலுக்கும், பொருட் சேதத்திற்கும் உள்ளாகின்றனர். விளைநிலங்களை பார்வையிட வந்த விவசாயிகள் அதிகாலையில் யானைகளை கண்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அதிகாலை 6 மணி முதல் யானையை விரட்ட தொடங்கி சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பின் யானை சாலையின் மேல்புறத்திற்கு விரட்டினர். இது போன்ற வனவிலங்குகள் அச்சுறுத்தல் காரணமாக இப்பகுதி விவசாயிகள் விளை நிலங்களுக்குள் செல்வதற்கே அச்சப்படுகின்றனர். மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே ஏற்படும் மோதல்களை தவிற்கும் பொருட்டு வனத்துறையினர் வன விலங்குகளுக்கான உணவு மற்றும் தண்ணீரை விலங்குகள் வசிக்கும் பகுதிகளிலேயே கிடைத்திட தொட்டிகள் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.