யூடியூப் சேனலில் தினம் ஒரு கருத்தை பதிவிட்டு வரும் அன்னபூரணி, ஆன்மீகம் என்றால் என்ன என்பது குறித்து புதியதாக ஒரு விளக்கத்தை அளித்துள்ளது "பக்தர்களிடையே" பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்னபூரணி அரசு அம்மா என்பவர் கடந்த 2013ஆம் ஆண்டு வேறு ஒரு பெண்ணின் கணவருடன் குடும்ப நடத்துவதாக அந்த சட்ட ரீதியிலான மனைவி கொடுத்த புகாரின் பேரில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அவருக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் எத்தனையோ புத்தி மதி சொல்லியும் அவர் கேட்கவில்லை. இந்த நிலையில் தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் எனக் கூறி கொண்டு பேஸ்புக் மற்றும் யூடியூப் சேனல்களில் பிரபலப்படுத்தி கொண்டார். கழுத்து நிறைய நகைகளுடன், மாலை அணிந்து கொண்டு அவருக்கு மக்கள் பூக்களால் அபிஷேகம் செய்கிறார்கள். இந்த நிலையில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி திவ்ய தரிசனம் என்ற ஒரு நிகழ்ச்சிக்கு அவர் அனுமதியின்றி ஏற்பாடு செய்ததாக கூறி போலீஸார் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்தனர். இதையடுத்து தனது யூடியூப் சேனல்களில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வருகிறார். அதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் கனவிலிருந்து விழித்துக் கொள்ளுங்கள் என்ற ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அது போல் அடுத்தது உணர்வு என்றால் என்ன? என்பது குறித்தும் அன்னபூரணி விளக்கம் அளித்து ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் சமாதி என்றால் என்ன என்பதையும் அவர் விளக்கியுள்ளார். 



"மனிதன் எல்ல தளங்களிலும் வாழ்ந்து இருக்கிறான், மனதின் தளம், எண்ணங்களின் தளம், அறிவின் தளம் ஆணவங்களின் தளம் ஆகியவற்றில் வாழ்ந்துகொண்டிருக்கிறான். சமாதி நிலை தான் மனிதன் பெரும்பாலும் அடையாத நிலை. 


சவை கல்ப சமாதி


கொஞ்ச நேரம் மட்டும் சமாதியாக இருக்கும் நிலை இது, அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ சமாதியாக இருப்பது. எங்கே சென்றோம் எங்கே வந்தோம் என்பதே தெரியாமல் ஒரே நொடியில் அந்த அரை மணி நேரத்தை கடந்துவிடுவதுதான் இது.


நிர்விகற்ப சமாதி


இதில்தான் இரண்டு வருடம் மூன்று வருடம் சமாதி நிலையில் இருந்து, புற வாழ்க்கை அனைத்தையும் விட்டு மனதை ஒரு நிலைப்படுத்தி, உடலோடு ஒடுங்கி இருந்து காலமற்ற நிலையில் இருப்பதுதான் இந்த சமாதி.


சகஜ சமாதி


இதில் நீங்கள் உள்ளே ஒடுங்கி இருப்பீர்கள், ஆனால் உங்கள் வெளி வேலைகள் அனைத்தும் நிற்காமல் நடந்துகொண்டே இருக்கும். நீங்கள் என்னும் வார்த்தை எதை குறிக்கிறதோ அது ஒடுங்கி இருக்கும், மற்றபடி உடல் வெளியில் செய்யவேண்டியதை எல்லாம் செய்துகொண்டிருக்கும். இதனால் புற உலக வேலைகள் எதுவும் கெடாது. உங்கள் வேலை, படிப்பு, குடும்பம் எல்லாம் சரியாக நடந்து கொண்டே இருக்கும், ஆனால் நீங்கள் உங்கள் உள்தன்மையில் லயித்துக்கொண்டே இருப்பீர்கள்." என்று சமாதியினை விளக்கினார்.



"இந்த நாகரிக காலத்திற்கு சகஜ சமாதி நிலை தான் தேவையான ஒன்று. அங்கு உங்ககுக்கு ஆணவம் எதுவும் இருக்காது, ஏனெனில் நீங்கள் உயிர்த்தன்மையுடன் கலந்து இருப்பீர்கள், இறைவனுடன் கலந்து இருப்பீர்கள். இறைவனோடு சங்கமிது செயல்கள் செய்யும்போது, எல்லாம் நிகழ்வாக மட்டுமே இருக்கும், எந்த கர்மாவும் உங்களை தொட்டு கூட பார்க்க முடியாது. எந்த கஷ்டங்களும் உங்களுக்கு வராது, உங்கள் வாழ்க்கையே சந்தோஷமாகவும் ஆனந்தமாகவும், கொண்டாட்டமாகவும் மட்டும் தான் இருக்கும். இந்த சமுதாயத்திற்குள் தான் நீங்கள் இருப்பீர்கள், ஆனால் இது எதுவுமே உங்களுக்குள் இருக்காது. 


சமாதி மற்றும் சாவு என்ன வித்யாசம்?


சமாதியில் நீங்கள் இருக்கும்போது இறைவனோடு, உயிர்தன்மையோடு இரண்டற கலந்து இருப்பதால் உடல் தனியாக உயிர் தனியாக இருக்கும். புளியம்பழத்தை ஆட்டிப் பார்த்தால், பழம் தனியா ஆடும், அதில் பழம் தனியாகவும் கூடு தனியாகவும் இருக்கும், அதுபோல நாம் வாழும் காலத்தில் நம் உடல் தனியாக, உயிர் தனியாக இருக்கும் நிலைதான் சமாதி நிலை. அந்த நிலையில் உள்ளபோது இயற்கை எப்போது உங்கள் உடலை கேட்கிறதோ அப்போது சந்தோஷமாக உங்கள் உடலை இயற்கையிடன் கொடுத்துவிட்டு ஆனந்தமாக விடை பெறுவீர்கள்.


சாவு என்றால் நீங்கள் உங்கள் உடலோடு ஒட்டி இருந்து, உடலை பற்றிக்கொண்டு இருக்கும்போது, இயற்கை உடலை வந்து பிடுங்கி எடுத்து சென்றால் அது தான் சாவு. பிறப்பு எப்படி சந்தோஷத்தை கொடுக்கிறதோ அதே போன்றதுதான் இறப்பும் கொண்டாட்டமானது. இறக்கப்போவது உடல்தான், நீங்கள் அல்ல. நீங்கள் எப்போதுமே மரணம் இல்லா பெருவாழ்வு வாழ்ந்துகொண்டுதான் இருப்பீர்கள். அதனை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா, உணராமல் இருக்கிறீர்களா என்பது தான் விஷயம். அதனால் வாழும் காலத்திலேயே உடலோடு ஒன்றாமல் வாழுங்கள், அப்படி வாழும்போது எந்தவித கஷ்டமா நஷ்டமோ வாழும் காலத்தில் வராது." என்று பல கம்பிகளை கட்டி காணொளியை முடித்துக்கொண்டார் அன்னபூரணி அரசு அம்மா.